யானை-மனித மோதலைத் தடுப்பதற்கு பத்து அம்சத் திட்டம்!

0
7

நாளாந்தம் மனித-காட்டு யானை மோதலால் நமது நாட்டில் பெரும் துயர் நிகழ்ந்து வருகிறது. ஒருபுறம் மனித வளங்களும் மறுபுறம் காட்டு யானை வளங்களும் அழிக்கப்படுகின்றன. எனவே, உடனடியாக அரசாங்கம் செயல்படுத்தப்பட வேண்டிய பத்து அம்ச வேலைத்திட்டத்தை கீழ்வருமாறு முன்மொழிகிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்தார்.

அவையாவன;

01- முறையானதொரு, விஞ்ஞான பூர்வமானதொரு துல்லியமான காட்டு யானைகள் தொடர்பான கணக்கெடுப்பை நடத்துதல்.

02- மனித-யானை மோதலைக் குறைப்பதற்காக 2020 ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட தேசிய செயல் வேலைத்திட்டத்தை உடனடியாக அமுலுக்கு கொண்டு வருதல்.

03- இந்த வேலைத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக வேண்டி, ஜனாதிபதியின் தலைமையில் விசேட ஜனாதிபதி செயலணியொன்றை தாபித்து, பல்வேறு நிறுவனங்கள், அமைச்சுக்களை ஒருங்கிணைத்து 2020 செயல் திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லல்.

04- யானைகளைப் பாதுகாப்பதற்கு விசேட படையணியைத் தாபித்தல்.

இலங்கை நாட்டில் யானைகளின் எண்ணிக்கையில் 6-7% வரையே தந்தங்களைக் கொண்ட யானைகள் காணப்படுகின்றன. கென்யாவில் அஹமட் என்ற பெரிய தந்தம் கொண்ட யானையைப் பாதுகாக்க விசேட படையணியொன்று உருவாக்கப்பட்டது போல, நமது நாட்டிலும் தந்தங்களைக் கொண்ட யானைகளைப் பாதுகாப்பதற்கு விசேட படையணியை தாபித்தல்.

05- யானை-மனித மோதலைக் குறைப்பதற்கான முயற்சிகள் தரவுகளை மையமாகக் கொண்டமைதல்.

நமது நாட்டினது பூமி பரப்பில் அண்மையில் நடத்தப்பட்ட யானைகள் தொடர்பான கணக்கெடுப்பின்படி, 5879 யானைகள் காணப்படுகின்றன. மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 19 மாவட்டங்கள் யானை-மனித மோதல் காரணமாகப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. 341 பிரதேச செயலகப் பிரிவுகளில் 131 பிரதேச செயலகங்களில் இந்த மோதல் காணப்படுகின்றன. 30% யானைகளே சரணாலயங்களிலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளிலும் காணப்படுகின்றன. மிகுதி 70% யானைகள் மனித நடமாட்டம் கொண்டமைந்த நிலப்பரப்பிலே காணப்படுகின்றன. 30% யானைகள் காணப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 18% ஆகும். இந்தத் தரவுகளை அடையாளம் கண்டு, வினைதிறனான நடைமுறை ரீதியான வேலைத்திட்டத்தை வகுத்தல்.

06- யானை-மனித மோதல் காரணமாக கணிசமான உயிர் இழப்புகள், சொத்துச் சேதங்கள் மற்றும் பயிர்ச் சேதங்கள் ஏற்படுவதால், முறையான காப்பீடு மற்றும் இழப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துதல்.

07- சில வருடங்களுக்கு முன்பு முன்மொழிந்த Project Elephant, Project Leopard, Project Whale போன்ற பல தேசிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.

08- பசுமையை மையமாகக் கொண்ட மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பை மையமாகக் கொண்ட உதவிகளை (நன்கொடை) பெற முடியும் என்பதால், இவற்றின் மீது கவனம் செலுத்தலாம்.

ரயில் தண்டவாளங்களில் ஏற்படும் விபத்துகளால் யானைகள் சிரமங்களை எதிர்கொள்வதைத் தடுப்பதற்கு விசேட தொழிநுட்பங்களைப் பயன்படுத்தலாம். வெளிநாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயல்திட்டங்களை நமது நாட்டிலும் முன்னெடுப்பதற்கு முடியும். இதற்கான உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

காட்டு யானைகள் நோய்வாய்ப்படும்போது சிகிச்சையளித்து அவற்றைப் பராமரிக்க நடமாடும் வைத்தியசாலைத் திட்டத்தை ஆரம்பிக்கலாம். இந்தியாவில் அம்பானி அவர்கள் முன்னெடுத்து வரும் திட்டத்தைப் போன்றதொரு திட்டத்தை சர்வதேச உதவியுடன் இங்கும் முன்னெடுக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

09- வனஜீவராசிகள் துறையில் காணப்பட்டு வரும் மனித மற்றும் பௌதீக வளங்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தல்.

வனஜீவராசிகள் உத்தியோகத்தர்களுக்கு உயர் மட்ட பயிற்சிகளை வழங்கி, வனப் பாதுகாப்புத் திட்டத்தை மேல்நிலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தும் தேசிய மட்டத்தில் அமைந்த வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்தல்.

10- சுற்றுச்சூழல் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு குறித்த அறிவைப் பெற்றுத் தரும் நவீன தரத்திலான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை நிறுவுதல்.

ஆராய்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் சுற்றுச்சூழலை மையமாகக் கொண்ட பாதுகாப்புத் திட்டங்கள் வாயிலாக சுற்றுலாத் துறையையும் மேம்படுத்துதல்.

மேற்குறிப்பிட்ட விடயங்களின் மீது கவனம் செலுத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். தேர்தல் பிரச்சாரத்தின் போது வழங்கிய சுற்றுச்சூழல் சார் வாக்குறுதிகளுக்கு மாறாக அரசாங்கம் இன்று நடந்து வருகிறது.

பயிர் சேதம், உயிர் இழப்பு, சொத்து சேதம் மற்றும் யானைகளின் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் துப்பாக்கிகளை விநியோகிப்பது இதற்கு தீர்வாக அமையாது. இவை அனைத்தையும் பாதுகாக்கக்கூடிய தீர்வொன்றை நோக்கி நாம் நகர வேண்டும். சமூகம் தலைமையிலான, சமூகத்தை மையமாகக் கொண்ட, சமூக பங்கேற்புமனான திட்டமொன்றின் மீது அவதானம் செலுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்.

யானையொன்றின் மரணம் அல்லது கொலையுடன் தொடர்புடைய சம்பவம், மனித உயிரொன்றை இழக்கும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் அவ்வப்போது பேசுபொருளாகும் ஒரு தலைப்பாக இது தொடர்ந்தும் அமையாது, முறையான வேலைத்திட்டமொன்றின் மூலம் இவற்றை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here