யால தேசிய பூங்காவின் 1, 2ஆம் பகுதிகள் தொடர்ந்தும் பூட்டு!

0
46
travelrebels

நிலவும் கடும் வறண்ட வானிலை காரணமாக யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2ஆம் பகுதிகள் இன்று (14) முதல் மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்தப் பகுதிகள் எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை ஒரு மாத காலத்திற்கு சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்பட்டிருக்கும்.

அதிகரித்துள்ள வெப்பநிலை மற்றும் நீண்டகால வறட்சி காரணமாக யால தேசிய பூங்காவிலுள்ள பல நீர்நிலைகள் வறண்டுள்ளதுடன், வனவிலங்குகளுக்கு குடிநீர் மற்றும் உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில், வனவிலங்கு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். மெனிக் கங்கையின் நான்கு இடங்களில் சூரிய சக்தியால் இயங்கும் பம்புகள் மூலம் பெறப்படும் நீர், நிலத்தடி குழாய்கள் வழியாக பூங்காவிலுள்ள குளங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மேலும், பூங்காவிலுள்ள இயற்கை மற்றும் செயற்கை குளங்களை நிரப்புவதற்காக தினமும் சுமார் 2 இலட்சம் லிட்டர் நீர் நீர் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யால தேசிய பூங்கா 44 வகையான பாலூட்டிகள், 215 வகையான பறவைகள், 47 வகையான ஊர்வன மற்றும் 21 வகையான மீன்களின் வாழ்விடமாக உள்ளது.

தற்போதைய வறட்சிக்கு மத்தியில் உணவு மற்றும் நீரைத் தேடி விலங்குகள் அலைந்து திரிவதால் அவற்றுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைக்கும் நோக்கிலேயே இந்த தற்காலிக மூடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here