பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (04) காலை உத்தரவிட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில், சட்டவிரோதமாக சம்பாதித்ததாக கூறப்படும் 59 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை 3 வங்கி கணக்குகளில் வைப்புச் செய்துள்ளதாக யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்றைய தினம் அழைக்கப்பட்ட போது யோஷித்த ராஜபக்ஷவும் டெய்சி பாட்டியும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
ஆனால், இந்த வழக்கை விசாரணை செய்யும் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன விடுமுறையில் உள்ளதால் வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.