முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்படவுள்ள வழக்குகளை மூவர் கொண்ட மேல்நீதிமன்ற அமர்வு முன் விசாரிக்கவேண்டுமென்று சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், சட்ட மா அதிபர் பரிந்த ரணசிங்கவிடம் முன்மொழிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்ட மா அதிபர் திணைக்களத்தில் சமீபத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
நடந்து வரும் விசாரணைகளில் நடவடிக்கைகளை மறுஆய்வு செய்வதற்காக சட் ட மா அதிபர் பரிந்த ரணசிங்கவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. சட்ட மா அதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள் திலீப பீரிஸ் மற்றும் சுதர்ஷன டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2023 செப்டெம்பரில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவுக்காக இங்கிலாந்துக்கு தனிப்பட்ட பயணமாக சென்றிருந்தபோது, 1.66 பில்லியன் அரசாங்க நிதி ரணிலால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து இங்கு பேசப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் முன்னாள் ஐ.ஜி.பி. தேசபந்து தென்னக்கோன் உட்பட கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவுக்கு எதிராக தொடர்புடைய வழக்குகளைத் தாக்கல் செய்வது குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசபந்து தென்னக்கோன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்படவுள்ள வழக்குகளை மூன்று பேர் கொண்ட மேல்நீதிமன்ற அமர்வு முன் விசாரிக்க வேண்டும் என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இதன்போது பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த விவகாரம் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் இதுவரை இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் சட்ட மா அதிபர் கூறியுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




