முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவகாரத்தில் எவ்வித இராஜதந்திர அழுத்தங்களும் அரசாங்கத்துக்கு பிரயோகிக்கப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
‘ எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்போ இது பற்றி கருத்து வெளியிடவில்லை. தனிநபர்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அந்த இருபர் பற்றி அலட்டிக்கொள்ள தேவையில்லை. இருவரில் ஒருவர் இதேபோன்ற குற்றச்சாட்டு உள்ளவர்.
தூதுவரோ, தூதரகமோ, உயர்ஸ்தானிகரோ இவ்வாறு எவ்வித அறிவிப்பையும் விடுக்கவில்லை. சட்டம் அனைவருக்கும் சமமாக செயற்படுகின்றது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது.” – என்றார் அமைச்சர் விஜித ஹேரத்.
அத்துடன், ரணில் விக்கிரமசிங்க விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்துள்ளது. இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.