கொழும்பு தவிர்ந்த ஏனைய ரயில் நிலையங்களில் பயணச்சீட்டுக்குரிய பணத்தைத் திரும்பப் பெறும் வசதி டிசம்பர் 25 ஆம் திகதி முதல் இலங்கை ரயில்வே திணைக்களத்தினால் விரிவுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் மட்டுமே பயணச்சீட்டுக்குரிய பணத்தைத் திரும்பப் பெறும் வசதி இருந்தது என்று போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை பதுளை, எல்ல, பண்டாரவளை , ஹப்புத்தளை, நானுஓயா மற்றும் ஹட்டன் ஆகிய புகையிரத நிலையங்களில் டிசம்பர் 25 முதல் பணத்தைத் திரும்பப் பெறும் வசதி கிடைக்கும் என்று அமைச்சர் எக்ஸ் தள பதிவொன்றில் தெரிவித்தார்.
இந்த வசதி ஒரு முன்னோடித் திட்டமாக அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ரயில்வே நிலையங்களிலும் செயற்படுத்தப்படும் என்று மேலும் அவர் கூறினார்.
இதேவேளை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் கண்டி ரயில் நிலையமும் இந்தப் பட்டியலில் சேரும் என்று அவர் கூறினார்.




