தனது பேனாவைக் கையாண்டு மக்களுக்காக ஊடகவியலில் ஈடுபட்ட சிரேஷ்டஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் பூர்த்தியாகின்றன.இலங்கையிலும், உலக அளவிலும் அவரது நினைவுதினம் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது.
தென்னிலங்கையின் ஆங்கில பத்திரிகை ஒன்றின் செய்தி ஆசிரியராக பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.அன்றைய தினம் காலை, தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது அத்திடிய பகுதியில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை பின்தொடர்ந்து, கொலை செய்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது.எனினும், கொலை செய்யப்பட முன்னர், தனது காரிலிருந்த குறிப்பு புத்தகத்தில் தன்னை பின்தொடரும் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை, லசந்த விக்ரமதுங்க எழுதியிருந்ததாக மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்தது.
இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்று சில வாரங்களுக்கு பின்னர் சர்ச்சைக்குரிய மேலும் சில சம்பவங்கள் பதிவாகின.
2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வவுனியா – செட்டிக்குளம் பிரதேசத்தில் கடத்தப்பட்ட இரண்டு இளைஞர்களின் தீக்கிரையாக்கப்பட்ட சடலங்கள் அநுராதபுரம் கம்மிரிஸ்கஸ்வெவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.அதன் பின்னர், லசந்த விக்மரதுங்கவை கொலை செய்வதற்கு வந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளொன்று அத்திடிய சதுப்பு நிலமொன்றிலிருந்து மீட்கப்பட்டது.
விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் லசந்த விக்ரமதுங்கவின் சாரதியும் கடத்திச் செல்லப்பட்டதுடன், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.கல்கிஸை பொலிஸாருக்கு முதலில் கிடைத்த தகவல்களின் பிரகாரம் விசாரணைகளை ஆரம்பித்தாலும் அது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவது தென்படவில்லை.
அதன் பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்களம் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச்சம்பவம் தொடர்பிலான விடயங்களை வெளிப்படுத்தி வந்த வேளையில், அந்த விசாரணை திடீரென பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு மாற்றப்பட்டது.
தொலைபேசி தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு ஏற்ப, இந்த கொலை தொடர்பில் 2010ஆம் ஆண்டு ஜேசுதாசன் என்ற ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர் விளக்கமறியலில் இருக்கும் போதே 2012ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.எனினும், 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி, ஆட்சி மாற்றம் இடம்பெறும் வரை லசந்த விக்மரதுங்கவின் கொலையுடன் தொடர்புபட்டதாக எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை.
2015ஆம் ஆண்டு இந்த விசாரணை மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி, அவ்வேளையில் அதன் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பொலிஸ் அத்தியட்சகர் சிசிர திசேரா மற்றும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வா ஆகியோர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அடக்கம் செய்யப்பட்டிருந்த லசந்த விக்ரமதுங்கவின் உடல் 2016 செப்டம்பர் மாதம் தடயவியல் விசாரணைகளுக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.இது துப்பாக்கிச் சூட்டினால் மேற்கொள்ளப்பட்ட கொலை அல்லவென தடயவியல் விசாரணைகளின் போது உறுதி செய்யப்பட்டது.
2016 – 2017ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, ஊடகவியலாளர்களான உபாலி தென்னகோன், கீத் நொயார் ஆகியோர் மீது தாக்குதல் மேற்கொண்ட குழுவிற்கும் இந்த கொலையை மேற்கொண்டவர்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக விசாரணைக்குழு வெளிப்படுத்தியது.
உபாலி தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஒருவர், பின்னர் விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர் என பெயரிடப்பட்டிருந்தார்.லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட காலத்தில், புலனாய்வு பிரிவின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றதாகக் கூறப்படும் கொழும்பு திரிபோலி எனப்படும் முகாமில் பணியாற்றிய சில உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டதுடன், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளையும் தொடர்புபடுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சில சந்தர்ப்பங்களில் இராணுவத்தின் சிலரும் இந்த சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டாலும் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் உரிய சந்தேகநபர்கள் இதுவரை பெயரிடப்படவில்லை.
இந்நிலையில், சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்ற காலத்தில் கல்கிசை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அவ்வேளையில் அந்த பிரதேசத்திற்கு பொறுப்பாகவிருந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். எனினும் அதிகாரிகளும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், இதுவரையில் அவரது கொலைக்கு நீதி கிடைக்கவில்லை.
லசந்த கொலை, எக்னெலிகொட காணாமல் போனமை, கீத் நொயர், போத்தல ஜயந்த மீதான தாக்குதல், 12 பாடசாலை மாணவர்களை கப்பம் பெற்றுக் கடத்தியமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் நீதி வழங்குவதாக ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தேர்தல் பிரசாரத்தின் போது உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.