நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட லிந்துலை மவுசல்ல கீழ்ப்பிரிவு, கொணன் ஆகிய தோட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
மவுசல்ல கீழ்ப்பிரிவு தோட்டத்திலுள்ள இரண்டு லயன் குடியிருப்பு பகுதிகளில் நிலம் தாழ்ந்துள்ளதால் இந்தக் குடியிருப்புக்களைச் சேர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தோட்ட நிருவாகத்தினரும் பிரதேச கிராம சேவகர்களும் அறிவித்துள்ளனர்.
இதே வேளை கொணன் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்புப் பகுதியிலும் நிலம் தாழ்ந்துள்ளதோடு சுவர்களில் வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் தோட்ட மக்கள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்
இதனைத் தொடர்ந்து அமைச்சரின் பணிப்புரைக்கேற்ப மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் , தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவர் வேலு சிவானந்தன், அமைச்சரின் பாராளுமன்ற ஆய்வாளர் ஜெட்ரூட் ஆகியோர் இந்தத் தோட்டங்களுக்கு விஜயம் செய்தனர்.
இதன் போது மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளைப் பார்வையிட்டதோடு பிரதேச கிராமசேவகர்களுடன் தொடர்பு கொண்டு பிரதேச செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். மவசல்ல கீழ்ப்பிரிவு, கொணன் ஆகிய தோட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்ட குடியிருப்புகளுக்குப்பதிலாக புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பில் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.