பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ராவல்பிண்டியில் நடைபெற்ற குறித்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 448 ஓட்டங்களைக் குவித்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காகச் சகல விக்கெட்டுகளையும் இழந்து 565 ஓட்டங்களைக் குவித்தது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணியின் சார்பில் முஷ்பிகுர் ரஹீம் 191 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.பின்னர் 117 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 23 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இந்த நிலையில் ஐந்தாம் நாளான இன்று துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.பந்துவீச்சில் பங்களாதேஷ் அணியின் மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதற்கமைய பங்களாதேஷ் அணிக்கு 30 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கித் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 6.3 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கைக் கடந்தது.இதன் மூலமாகப் பாகிஸ்தான் அணியை முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி பங்களாதேஷ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற சாதனையையும் பங்களாதேஷ் அணி படைத்துள்ளது.