இந்நாட்டில் 100,000க்கும் அதிகமானோர் ஹெரோயின் போதை பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். வலி நிவாரணிகளை அதிக அளவில் உட்கொள்வதன் காரணமாக பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களிடையே கடுமையான மன உளைச்சல், வலிப்பு , வலிப்பு நோய்க்கான அறிகுறிகள் தோன்றுவதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் உளவியலாளர் வைத்தியர் கிஹான் அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, இவ்வாறான நிலைமைகளில் சிறுவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போக்கு அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் பெற்றோர்கள் இவ்வாறான அறிகுறிகள் தென்படின் வலிப்பு நோய் என நினைப்பதாகவும் எனினும் வலிநிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்வதே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“உலக மது ஒழிப்பு தினத்துடன் இணைந்து போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து நாட்டைக் காப்போம்” என்ற தொனிப்பொருளில் நேற்று (03) நடைபெற்ற நிகழ்ச்சியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
” இதுவரை பதிவாகியுள்ள தரவுகளின்படி, இந்நாட்டில் 100,000க்கும் அதிகமானோர் ஹெரோயின் போதை பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
அவர்களில் 6,000 க்கும் அதிகமானோர் போதைப்பொருள் தடுப்பு ஊசியை பெற்றுக்கொள்வதற்கு ஆசைப்படுகின்றனர்.
ஹெரோயின் போதைப்பொருளை அதிகமாக உட்கொள்வதால் உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
ஹெரோயின் கிடைக்காத போது, இளைஞர்கள் வலிமையான வலி நிவாரணிகளை பயன்படுத்த ஆசைப்படுகின்றனர்.
சிசேரியன் செய்த தாய் ஒருவரை விட பாடசாலை மாணவர்கள் தினமும் வலிநிவாரணி மாத்திரைகளை பல மடங்கு அதிகமாக உட்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சில வருடங்களுக்கு முன்னர் மாத்தளை மாவட்டத்தில் 13 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 28 வீதமான மாணவர்கள் போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளனர்.
69 வீதமானோர் சிகிச்சை தேவைப்படும் நிலையில் காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. ” என தெரிவித்தார்.
மாத்தளை, கண்டி, தெல்தெனிய மற்றும் கம்பளை பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 350 போதைக்கு அடிமையான இளைஞர்கள் குறித்த நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்ததுடன், ஏற்பாட்டுக் குழுவினர் அவர்களின் பிரச்சினைகளை வைத்தியர்களுடன் கலந்துரையாடி சிகிச்சை பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பளித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.