தோட்டத்தொழிலாளர்களுக்கு கோதுமை மா நிவாரணம் வழங்கப் போவதாக கூறி தோட்டத் தொழிலாளர்களைச் கொச்சைப் படுத்தாமல் சகல தோட்டத் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் அட்டன் தலைமை பணிமனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிப் பொதுச்செயலாளர் கல்யாணகுமார் ,கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரன் ,தொழிலாளர் தேசிய சங்கத்தின் அட்டன் அமைப்பாளர் ஜெஸ்டின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சோ. ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:
நாட்டிலுள்ள சகல அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கும் ஓய்வூதியகாரர்களுக்கும் இம்மாதம் முதல் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர்
அறிவித்துள்ளார். அதே போல விவசாயப் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் நில உரிமையாளர்களுக்கும் ஐயாயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். இந்த இரண்டு வகையான நிவாரண திட்டத்திலும் எவ்வகையிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மை கிடைக்கப்போவதில்லை.
ஊழியர் சேமலாப நிதி கொடுப்பனவுக்குரிய தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத்திரம் மாதம் ஒன்றுக்கு 15 கிலோ கிராம் கோதுமை மா ஒரு கிலோ கிராம் 80 ரூபாய் அடிப்படையில் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்கள் கோதுமை மாவுக்கு அடிமையானவர்கள் அல்லர்.
இவ்வாறான திட்டங்களால் தோட்டத்தொழிலாளர்களை அவமதிக்க கூடாது.
இந்த நாட்டுக்கு அந்நிய செலவாணியை ஈட்டித்தருகின்றவர்கள் தோட்டத் தொழிலாளர்கள்.
அவர்களுக்கு அரசாங்கம் உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும். நாட்டின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் இந்த நாட்டில் வாழுகின்ற சகல மக்களும் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். மாறாக கோதுமை மா மானியம் வழங்குகின்றோம் என்று கூறி தோட்டத் தொழிலாளர்களைச் கொச்சைப்படுத்த வேண்டாம்.