விரக்தியில் ஓய்வை அறிவித்தார் அமித் மிஸ்ரா!

0
20

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா, அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அணியில் தனக்கான வாய்ப்பு குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.

42 வயதான அவர், இந்திய அணிக்காக கடைசியாக கடந்த 2017-ல் விளையாடி இருந்தார். கடந்த 2024 வரை ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி இருந்தார். இந்திய அணிக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளராக அறியப்படுகிறார்.

“எனது முதல் நேசம், எனது ஆசான், எனது மகிழ்ச்சியின் ஆதாரமாக திகழ்ந்த கிரிக்கெட் விளையாட்டில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். 25 ஆண்டுகளான நிலையில் இதை இப்போது அறிவிக்கிறேன்.

இந்த பயணத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் சிறந்த அனுபவத்தை தந்தது. அது என்னை கிரிக்கெட் வீரராகவும், மனிதராகவும் கட்டமைத்தது. ஆரம்பகால போராட்டத்தை கடந்த பிறகு மறக்க முடியாத தருணங்களை களத்தில் நான் பெற்றுள்ளேன். இப்போது எனது நெஞ்சமெல்லாம் நன்றியுணர்வும், அன்பும் நிறைந்துள்ளது. எனக்கு அனைத்தையும் கொடுத்தது கிரிக்கெட். இப்போது அதற்கு நான் கற்றதையும் பெற்றதையும் திரும்ப தர ஆவலுடன் உள்ளேன்.

சில நேரங்களில் அணியில் இடம்பெற்று இருப்பேன், சில நேரங்களில் இடம்பெறாமல் இருப்பேன். சில நேரங்களில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும், சில நேரங்களில் அந்த வாய்ப்பு இருக்காது. இப்படி அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தது நிச்சயம் ஒரு வீரராக எனக்கு விரக்தி அளித்தது. அதில் சந்தேகம் இல்லை. சில வீரர்கள் கேப்டனின் பேவரைட்டாக இருக்கலாம். ஆனால், அது ஒரு விஷயம் அல்ல. வாய்ப்பு கிடைக்கும் போது உங்கள் திறனை நீங்கள் நிரூபிக்க வேண்டும்” என அமித் மிஸ்ரா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here