லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொப்டன் புளுகலை பகுதியில் விறகு சேகரிக்க சென்ற ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
நேற்று புதன்கிழமை பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் 73 வயதுடைய ஆண் ஒருவர் தனது வீட்டிலிருந்து விறகு சேகரிப்பதற்காக காட்டு பகுதிக்கு சென்றுள்ளார்.
இவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி அயலவர்களுடன் இணைந்து ரபர்வத்தை காட்டுப்பகுதியில் தேடுதலை மேற்கொண்டனர்.
இதன்போது மாலை 6.30 மணி அளவில் வீட்டிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரம் கொண்ட ரபர்வத்தை காட்டுப்பகுதியில் இருந்து இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து லுணுகலை பொலிஸாருக்கு தேடுதலை மேற்கொண்டவர்கள் அறிவித்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்துக்கு அருகாமையில் காவலில் ஈடுபட்டு வருவதோடு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலத்தை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் வைத்திய பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.