விலங்கு கணக்கெடுப்புக்கு ரூ.39 இலட்சம் செலவு!

0
56

இலங்கையில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட விலங்கு கணக்கெடுப்புக்காக 39 இலட்சத்து 16,314 ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பின் மூலம் இலங்கையில் 51,97,517 மந்திகள், 17,47,623 குரங்குகள், 26,66,630 மர அணில்கள், 42, 85,745 மயில்கள் இருப்பது தெரியவந்துள்ளதென விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (25) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பி.ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில்,

‘‘இலங்கையில் விலங்குகள் கணக்கெடுப்பு 2025.03.15 ஆம் திகதியன்று யாழ். மாவட்டத்தில் நெடுந்தீவை தவிர்த்து ஏனைய சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கணக்கெடுப்புக்கு 39 இலட்சத்து 16ஆயிரத்து 314 ரூபா செலவிடப்பட்டது. இந்த விலங்கு கணக்கெடுப்புக்கு பல கோடி ரூபா செலவிடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது.

விலங்கு கணக்கெடுப்பின் பெறுபேறு கடந்த ஏப்ரல் சகல பிரதேச செயலகப் பிரிவுகள் ஊடாக விவசாயத்துறை அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றது. இதற்கமைய இலங்கையில் 51 இலட்சத்து 97ஆயிரத்து 517 ஆயிரம் மந்திகள், 17 இலட்சத்து 47ஆயிரத்து 623 குரங்குகள், 26 இலட்சத்து 66ஆயிரத்து 630 மர அணில்கள், 42 இலட்சத்து 85ஆயிரத்து 745 மயில்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் கடந்த காலங்களில் விலங்கு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. இதனால் காட்டு விலங்குகளால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் விளைவை மதிப்பிடுவதிலும் விலங்குகளை கட்டுப்படுத்துவதிலும் சிக்கல் காணப்பட்டது. காட்டு விலங்குகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தான் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கணக்கெடுப்பின் தரவுகள் 50 சதவீதமளவில் உறுதியானதாக அமையாது என்பதை அறிவோம். இருப்பினும், மிகுதி 50 சதவீதமான தரவுகள் உறுதியானவை. முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை வெற்றியளித்துள்ளது. இந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு காட்டு விலங்குகளை கட்டுப்படுத்த தொழில்நுட்ப ரீதியில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here