கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேனில்வேர்த் தோட்ட இலக்கம் 1 பிரிவிலுள்ள தெப்பக்குளத்திலிருந்து 62 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமொன்றை இன்று காலை 9 மணியளவில் பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் மீட்டெடுத்துள்ளனர். கேனில்வேர்த் இலக்கம் மூன்று பிரிவைச் சேர்ந்த இராசலிங்கம் (வயது 62) பெயருடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு (11ஆம் திகதி) இரவு 8 மணியளவில் தனது மகனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட இராசலிங்கம்(உயிரிழந்தவர்) தான் தெப்பக்குளத்தில் குதிக்கப் போவதாக கூறிக்கொண்டு தெப்பக்குளத்தில் குதித்துள்ளார். தொலைபேசியின் ஊடாக குதிக்கும் சத்தம் மகனின் செவிக்கு கேட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்துக்கு வருகை தந்த உறவினர்கள் இரவு முழுவதும் நீர்த்தேக்கத்தில் குதித்தவரைத் தேடியுள்ளனர். எனினும் இன்று காலையில் அவரின் சடலத்தையே மீட்டெடுத்துள்ளனர் . இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.