இலங்கை அரசின் முழுமையான அணுசரனையுடன் 33 வருடங்களுக்கு முன்னதாக தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட தமிழினப் படுகொலையின் அதி உச்சகொடூரங்களில் ஒன்றான கறுப்பு ஜூலையின் போது இடம்பெற்ற வெலிகடை சிறைச்சாலை படுகொலை நாள் இன்று தமிழர்களால் மிக உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களின் பூர்வீகப் பிரதேசங்களில் ஒன்றான வடக்கில் தமது ஆதிக்கத்தை விஸ்தரித்திருந்த இலங்கை அரச படையினரில் 13 பேரின் உயிரைப் பறித்ததற்காக பழிதீர்க்கும் வகையில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் முழுமையான அனுசரணைக்கு அமைய 1983 ஆம் ஆண்டுஜுலை 23 ஆம் திகதி முதல் ஜூலை இனப்படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.
1983ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் திகதியான 33 வருடங்களுக்கு முன்னர் இன்றைய போன்ற ஒரு நாளில் இலங்கை அரசாங்கத்தின் அதி உயர் பாதுகாப்புக்கள் நிறைந்த வெலிகடைக் சிறைச்சாலைக்குள் குட்டிமணி தங்கத்துறை உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகள் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
ஜூலை 23 ஆம் திகதி முதல் தொடர்ந்த இந்தத் திட்டமிட்ட இனப்படுகொலைகளின்போது மூவாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், தென்பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் அவர்களது அனைத்து உடமைகளும் பறிக்கப்பட்ட நிலையில் வடக்கிற்கு விரட்டியடிக்கப்பட்டனர்.
அதேவேளை ஆயிரக்கணக்கான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி புலம்பெயர் நாடுகளிலும் தஞ்சமடைந்தனர். இதற்கமைய அன்று முதல் ஆரம்பமான தமிழ் மக்களின் புலம்பெயர்வு இன்றும் தொடர்கின்றன. இதற்கமைய புலம்பெயர் தமிழ் சமூகம் என்ற ஒரு சமூகம் உருவாவதற்கும் ஏதுவாக இந்த கறுப்பு ஜூலை இனப்படுகொலையே வித்திட்டதுடன், அன்று முதல் தொடரும் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரும் போராட்டங்களும் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை நிலைநாட்டுவதாகக் கூறி ஆட்சிபீடம் ஏறிய 83 ஜூலை கலவரத்தின் போது ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் இதுவரை கறுப்புஜூலை இனப்படுகொலைகள் குறித்து நீதியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
குறிப்பாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதன் ஊடாகவே நாட்டில் நிரந்தர சமாதானத்தையும், அபிவிருத்தியையும் அடைய முடியும் என்றும் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தொடர்ச்சியாக கூறியும் வருகின்றனர்.
எனினும் 33 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அரசிற்கு சர்வதேச அரங்கில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய 83 கறுப்பு ஜூலை இனப்படுகொலை தொடர்பிலோ, 2009 இல் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது நிகழ்த்தப்பட்ட யுத்தக் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பிலோ இதுவரை நல்லாட்சி அரசாங்கம் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.
இந்த நிலையிலேயே வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகளை கண்டித்தும், வெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்ட தியாகிகளை நினைவு கூர்ந்தும் இன்று யாழ்ப்பாணத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைய வெலிக்கடை படுகொலைதினம் இன்று காலை நல்லூர் ஆலயமுன்றலில் சுடர்கள் ஏற்றப்பட்டு நினைவு கூரப்பட்டது.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினரான அனந்தி சிசதரன் உட்பட பலர் கலந்துகொண்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தியாகிகள் உட்பட கறுப்பு ஜுலை மற்றும் பல்வேறு இனப்படுகொலை நிகழ்வுகளில் படுகொலை செய்யப்பட்ட தியாகிகள் மற்றும் மக்களை நினைவு கூர்ந்தனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல், குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன், ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன், தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம், சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம், செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன், அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும் செல்லதுரை ஜெயரெத்தினம், அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன், ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம், சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப்பிள்ளை சுரேஷ்குமார், சின்னதுரை அருந்தவராசா, தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார், மயில்வாகனம் சின்னையா, சித்திரவேல் சிவானந்தராஜா, கணபதிப்பிள்ளை மயில்வாகனம்,தம்பு கந்தையா, சின்னப்பு உதயசீலன், கணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன், கிருஷ்ணபிள்ளை நாகராஜா,கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம், அம்பலம் சுதாகரன், இராமலிங்கம் பாலச்சந்திரன்,பசுபதி மகேந்திரன்,கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன், குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம், மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார், ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார், ராஜன் கோதண்டபிள்ளை தவராஜலிங்கம், கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார், யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன், அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம், அந்தோணிப்பிள்ளை உதயகுமார், அழகராசா ராஜன், வேலுப்பிள்ளை சந்திரகுமார், சாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார் ஆகியோர் முதல்நாள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதேவேளை தெய்வநாயகம் பாஸ்கரன், பொன்னம்பலம் தேவகுமார், பொன்னையா துரைராசா, குத்துக்குமார் ஸ்ரீகுமார், அமிர்தநாயகம் பிலிப்குமாரகுலசிங்கம், செல்லச்சாமி குமார், கந்தசாமி சர்வேஸ்வரன், அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை, சிவபாலம் நீதிராஜா, ஞானமுத்து நவரத்தின சிங்கம், கந்தையா ராஜேந்திரம், டாக்டர் ராஜசுந்தரம், சோமசுந்தரம் மனோரஞ்சன், ஆறுமுகம் சேயோன், தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன், சின்னதம்பி சிவசுப்பிரமணியம், செல்லப்பா இராஜரட்னம், குமாரசாமி கணேசலிங்கன் ஆகியோர் இரண்டாம் நாள் படுகொலை செய்யப்பட்டனர்.