“ நான் உண்மையைக் கூறியே அரசியல் நடத்துகின்றேன், வேலை செய்தால் எனக்கு வாக்களிக்கலாம், இல்லையென்றால் வீட்டுக்கு அனுப்பலாம்.” – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“ ஆயிரத்து 700 ரூபா கிடைக்கும் என ஜனாதிபதி, தொழில் அமைச்சர் மற்றும் இதொகாவின் பிரமுகர்கள் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை நம்பாமல் காணி உரிமை தர மறுக்கும் கம்பனிகளின் பேச்சை நீங்கள் (தோட்டத் தொழிலாளர்கள்) நம்புகின்றீர்கள். இதுதான் நமது மக்களிடம் உள்ள பிரச்சினை, ஒற்றுமையை காணோம்.
ஏன் முதுகெலும்பற்ற சமூகமாக மாறிவிட்டீர்கள்?
அந்த முதுகெலும்பு திருப்பி இருக்கனும், நமக்கென்று ஒரு திமிரு இருக்கவேண்டும், கெத்து இருக்க வேண்டும், அப்படி இருக்க முடியவில்லையா, இங்கிருந்து பிரயோசனம் இல்லை, மீண்டும் இந்தயாவுக்கு சென்றுவிடுவோம்.
ஒரு தடவை அடிக்கும்போது நாம் மௌனம் காத்தால் அடிப்பவன் மீண்டும் அடிப்பான், ஒரு தடவை நாம் திருப்பி அடித்தால் எல்லோரும் அடங்குவார்கள்.
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் சம்பள உயர்வுக்கு வந்தால்தான் நாம் உடன்படுவோம்.” – என்றார்.