ஹட்டன் புனித கெப்ரியேல் மகளிர் கல்லூரியின் தமிழ் பிரிவை சிங்கள மயமாக்க தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.
இதனால், பாடசாலையில் ஒரு பதற்ற நிலை காணப்படுவதாகவும் தற்போது இந்த விடயம் பேசும் பொருளாக மாறிவருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
மேலும், குறித்த பாடசாலையில் மலசல கூட கழிவுத் தொட்டி நிரம்பியுள்ளதால் அப்பிரிவு மாணவிகள் கடந்த இரு வாரங்களாக கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
மேற்படி கழிவு நீரை அகற்றும் செயற்பாடுகள் இன்னும்செய்யப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.தொடர்ந்து அப்பாடசாலையில், தமிழ் பிரிவு கடும் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றமை மாணவர்களிடையே கடும் மனவுளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரு வாரங்களாக மேற்படி பாடசாலை மாணவிகள் தமது இயற்கை கடனை கழிப்பதில் மிகுந்த சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் பெற்றோர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து இப்பாடசாலையில் இந்த நிலைமை நீடித்தால் பெற்றோர்கள் போராட்டத்தில் இறங்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் இதுதொடர்பாக பாடசாலையின் தழிம் பிரிவுக்கு பொறுப்பான அதிபரிடம் வினவிய போது,
மழைக்காலங்களில் இவ்வாறு மலசல கூட கழிவு நீர்த்தொட்டி நிரம்புவது வழமையான ஒன்றாகும். ஆனால், அவசர தேவைகளுக்கு நாம் சிங்கள பிரிவு மாணவிகள் பாவிக்கும் மலசல கூடத்தை பயன்படுத்த அனுமதித்தோம் என தெரிவித்தார்.
தமிழ் பிரிவை எடுத்துக்கொண்டால் மேலும் அதிகமான பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், கழிவு நீர் அகற்றல் தொடர்பில் கதைத்துள்ளோம் எனவும் உடனடியாக இது தொடர்பிலான முடிவினை எடுக்க முடியாதுள்ளதாகவும் கொடுப்பனவுகள் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, தமிழ் பிரிவு மாணவர்கள் தொடர்பில் மிகவும் குறைவாகவே கவனம் செலுத்தப்படும் நிலையில், தமிழ் பிரிவையும் சிங்கள மயமாக்க தீர்மானித்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளதாகவும் அதிபர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆகவே, உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு சரியான தீர்வை தமிழ் பிரிவிற்கு பெற்றுக்கொடுப்பது மிகவும் அவசியமாகும்.