சிறுபான்மை மக்களை மறந்த மைத்திரி – நாட்டை படுபாதாளத்திற்கு தள்ள நினைப்பதாக வேலுசாமி இராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!!

0
88

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இலங்கை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் நாட்டை படுபாதாளத்தில் தள்ளுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து இருக்கின்றாரா?என்ற சந்தேகம் ஏற்படுவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மலையகம் வட,கிழக்கு உட்பட அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் சிறுபான்மை மக்கள் விசேடமாக தமிழ் மொழி பேசுகின்ற மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி, இன்று சிறுபான்மை மக்களின் கருத்துக்களையும் அவர்களது எண்ணங்களையும் கடுகளவும் கண்டுகொள்வதில்லை. இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்றும் கூறினார்.

மலையக ஆசிரியர் முன்னணி யின் கலந்துரையாடல் கூட்டம் இன்று (20.11.2018) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உருவாக்குவதற்கு இலங்கையில் இருக்கின்ற தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து மிகவும் ஒற்றுமையாக ஒரு நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இவருக்கு வாக்கு சேகரித்து இவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள்.

ஆனால், இன்று தெரிவுசெய்யப்பட்ட அந்த மக்களின் எந்தவிதமான கருத்துக்களையும் அல்லது அந்த மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்ளாமல் ஜனாதிபதி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார் அவை அனைத்துமே ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்பதை அவர் நன்கு தெரிந்திருந்தும் இதனை முன்னெடுப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாகும்.

கடந்த மாதம் 26ம் திகதி இடம்பெற்ற நிகழ்வுகளின் பின்பு எங்களுடைய நாடு பல்வேறு வழிகளில் பின்னடைவை சந்தித்து வருகின்றது இன்று பல அமைச்சர்கள் அரச காரியாலயங்கள் செயலிழந்து காணப்படுகின்றது மக்களுடைய அன்றாட தேவைகளை தங்களுடைய விடயங்களை செய்துகொள்ள முடியாமல் அவர்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தும் தடைபட்டு பாதியிலேயே நின்று கொண்டிருக்கின்றது. பொருளாதார ரீதியாக நாங்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றோம் சுற்றுலாத்துறை நாளுக்கு நாள் பின்னடைவை சந்தித்து வருகின்றது.

பல நாடுகளின் எதிர்ப்புகளை நாங்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது சர்வதேச ரீதியாக இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் பாராளுமன்றத்தில் நடந்த செயல்பாடுகள் இந்த நாட்டின் அனைவரையும் தலைகுனிய வைக்கிறது எனவே, இதற்கெல்லாம் காரணமாக இருந்தவர் ஜனாதிபதி என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த விடயங்கள் எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டிய பொறுப்பு அவரிடம் இருக்கின்றது ஆனால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை அதற்கான எந்த ஒரு முன்னெடுப்புகளும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை. தனிப்பட்ட ஒரு சிலரின் விருப்பு வெறுப்புக்காக ஒரு நாடும் அந்த நாட்டு மக்களும் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நல்லாட்சி அரசாங்கம் எத்தனையோ பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டது அந்த எதிர்பார்ப்புகளை படிப்படியாக முன்னோக்கி நகர்த்தி செல்கின்ற பொழுது இவ்வாறு இரவில் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டு எந்த ஒரு நாட்டிலும் இடம்பெறாத வகையில் இந்த நாட்டில் ஆட்சிமாற்றம் இடம்பெற்றிருக்கின்றது.

ஆட்சி மாற்றத்தை செய்ய வேண்டுமாக இருந்தால் அதற்கென எங்களுடைய நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டதிட்டங்கள் இருக்கின்றது நாங்கள் எதை செய்வதாக இருந்தாலும் பாராளுமன்ற சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அதனை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை நாங்கள் இழந்து விடுவோம்.

இந்த நாடு கடந்த காலங்களில் பல்வேறு ஜனநாயக முறைகேடான செயல்களை செய்ததன் காரணமாக நாங்கள் சர்வதேச ரீதியாக பல சிக்கல்களை எதிர்நோக்கி இருந்தோம் நல்லாட்சி அரசாங்கத்தில் படிப்படியாக ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ஜனநாயகத்தை பாதுகாக்கும் நாடு இலங்கை என்பதை சர்வதேசம் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு நாங்கள் சர்வதேச ரீதியாகவும் உள்ளூரிலும் செயற்பட்டுக் கொண்டிருந்தோம்.

அப்படியான ஒரு சூழ்நிலையில் ஜனாதிபதியின் இந்த செயல்பாடு மீண்டும் எங்களை படு பாதாளத்தில் தள்ளி இருக்கின்றது என்பதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்று எங்கு சென்றாலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை மக்கள் கேலி செய்யும் அளவிற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றது.

இதிலே ஒரு விடயத்தை நாங்கள் தெளிவாக கூறிவைக்க விரும்புகின்றோம் எந்தவிதத்திலும் ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாடுகள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை அல்லது சம்பந்தப் படவில்லை என்பதும் நாங்கள் மிகவும் அமைதியாகவும் ஜனநாயக முறைப்படி பாராளுமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் இந்த நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் தெளிவுபடுத்துகின்றோம்.

எனவே, சிறுபான்மை மக்களாகிய வட,கிழக்கு தமிழர்களாக இருக்கட்டும் மலையகத்தமிழர்கள் ஆக இருக்கட்டும் அல்லது இந்த நாட்டிலே பரந்து வாழ்கின்ற அனைத்து தமிழர்களும் முஸ்லிம் மக்களும் ஜனநாயகத்தையே விரும்புகின்றார்கள் என்பதை நாங்கள் மிகவும் தெளிவாக இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக்காட்டி இருக்கின்றோம்.

உண்மையிலேயே தமிழர்கள் இந்த நாட்டின் அபிவிருத்தியிலும் அதன் முன்னேற்றத்திலும் மிகவும் அக்கறையுடன் செயல்படுவதை பல சந்தர்ப்பங்களில் நாங்கள் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் கொடுத்திருக்கின்றோம்.

நாங்கள் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம். நாளை பாராளுமன்றத்திற்கு பல புதியவர்கள் வரலாம். பல புதிய ஜனாதிபதிகள் வரலாம். பல புதிய பிரதமர்கள் வரலாம். பல புதிய அமைச்சர்கள் வரலாம். ஆனால், பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தையும், இந்த நாட்டினுடைய ஜனநாயகத்தையும் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு எங்கள் அனைவருக்குமே இருக்கின்றது.

இன்று இலங்கையிலே இருக்கின்ற சூழ்நிலை மிகவும் மோசமாக இருக்கின்றது மிக விரைவிலேயே இதற்கு உரிய தீர்வை எடுப்பதற்கு ஜனாதிபதி முன்வராவிட்டால் அதனுடைய பாதிப்புகளை இந்த நாட்டு மக்களே சந்திக்க வேண்டியிருக்கும்.

பல நாடுகள் எமக்கு எச்சரிக்கை விடுதுள்ளன. சர்வதேச ரீதியாக எங்களுடைய நாட்டை ஓரம் கட்டுவதற்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படலாம். அப்படியான சூழ்நிலையில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த நாட்டை கடுகளவேனும் முன்கொண்டு செல்வதற்கு முடியாது.

நாங்கள் முப்பது வருட யுத்தத்தில் இருந்து வெளியில் வந்து படிப்படியாக வளர்ந்து வருகின்ற அந்த வளர்ச்சிக்கு சர்வதேசம் அதேபோல அனைத்து உலக நாடுகளும் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் தனித்து நின்று முன்னேறுவதற்கு எங்களுக்கு இன்னும் சக்தி கிடையாது.

எனவே, அப்படியாக இருந்தால் உடனடியாக இன்று நிலவுகின்ற இந்த பிரச்சினைக்கு ஜனாதிபதி தீர்வை பெற்றுக் கொடுத்து மீண்டும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டும்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த நாட்டின் ஜனாதிபதிகள் வரிசையில் மிகவும் மோசமான அல்லது மிகவும் மக்களால் வெறுக்கப்பட்ட ஜனாதிபதியாக இந்த ஜனாதிபதி மாறி விடுவார் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் நான் கூற விரும்புகின்றேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here