அடிப்படை வசதிகளின்றி இயங்கும் நோர்வூட் பிரதேச செயலகம்: சோ. ஸ்ரீதரன் தெரிவிப்பு

0
58

நோர்வூட் தியசிறிகமவில் தற்காலிக கட்டிடம் ஒன்றில் இயங்கும் நோர்வூட்
பிரதேச செயலகத்தினால் பிரதேச மக்களுக்கு உரிய வகையில் சேவைகள் கிடைப்பதில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

நோர்வூட் பிரதேச செயலகத்துக்கு விஜயம் செய்த ஸ்ரீதரன் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கேட்டு அறிந்து கொண்டதன் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நல்லாட்சி அரசாங்கத்தின் போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் எடுத்த முயற்சியின் காரணமாக அம்பகமுவ பிரதேச செயலகம் அம்பகமுவ, நோர்வூட் பிரதேச செயலகங்களாகப் பிரிக்கப்பட்டன.

இவ்வாறு பிரிக்கப்பட்டதன் பின்பு நோர்வூட் தியசிறிகமவில் உள்ள சிறிய
கட்டிடமொன்றில் நோர்வூட் பிரதேச செயலகம் உப பிரதேச செயலகமாக இயங்க ஆரம்பித்தது. அதன் பின்பு தற்போது நோர்வூட் பிரதேச செயலகம் என்று பெயர்ப் பலகை மாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. எனினும் பிரதேச செயலகத்துக்குரிய எவ்விதமான கட்டிட வசதிகளும் ஏனையவசதிகளும் இதுவரை ஏற்படுத்தப்படாத காரணத்தினால் இங்குப் பணி புரிகின்ற அரச உத்தியோகஸ்தர்களும் பல்வேறு தேவைகளுக்காக வருகின்ற பொதுமக்களும் பல்வேறு அசெளகரிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் 35 கிராமசேவகர் பிரிவுகளில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வாழ்கின்றனர். அம்பகமுவ பிரதேச செயலகத்தில் சகல வசதிகளும் உள்ளன. ஆனால் 32 கிராமசேவகர் பிரிவுகள் உள்ள நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் 208000 பேர் வாழ்கின்றனர்.

எனினும் நோர்வூட் பிரதேச செயலகத்துக்கு இதுவரை செயலாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. தற்போது இந்தப் பிரதேச செயலகம் இயங்கும் இடத்தினைப் பொருத்தமான இடம் ஒன்றுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பிரதேசம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே மக்களின் நலன் கருதி நோர்வூட் பிரதேச செயலகத்தை உரிய வகையில்
இயங்க செய்வதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீதரன் மேலும் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here