எரிபொருள் விலை அடுத்த வருடத்திலிருந்து நாளாந்தம் மாற்றமடைய உள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்த நிலையில் தற்போது அடுத்த வருடத்திலிருந்து மின் கட்டண திருத்ததமும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறு மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு தேவையான தரவுகளை வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி தேவையான தரவுகள் விரைவில் வழங்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார்.
அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான 54 பில்லியன் ரூபாவைக் கண்டறிய மின்சாரக் கட்டணத்தை முப்பத்திரண்டு வீதத்தால் உயர்த்துமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் ஆணையம் இதுவரை அதற்கு சரியான பதிலை அளிக்கவில்லை.
அடுத்த ஆண்டு மின்சார உற்பத்தி செலவை 87 சதவீதத்தால் குறைக்க மின்சார சபை தயாராகி வருகிறது, அதன்படி இயற்கை எரிவாயு மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்தினால், மின் கட்டணத்தை குறைக்கலாம் என்பது சபையின் எதிர்பார்ப்பு. மின்சார சபையின் உற்பத்தித் திட்டத்தின்படி 2026ஆம் ஆண்டுக்குள் 2500 மெகாவாட் மின்சாரத்தையும், 2030ஆம் ஆண்டுக்குள் 3000 மெகாவாட் மின்சாரத்தையும் பெறுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மின்சக்தி அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளன.
மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் பிரகாரம், தேவைப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையும் எதிர்காலத்தில் அமைச்சுக்கு வழங்கப்பட உள்ளது. தற்போது மின்சார சபையில் சுமார் இருபத்து மூவாயிரத்து ஐநூறு பணியாளர்கள் பணிபுரிவதுடன், ஏழு மில்லியன் நுகர்வோருக்கு மின்சார சபையின் கீழ் மின்சாரம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.