களுத்துறை மாட்டத்தின் பண்டாரகம, அட்டலுகம பகுதியில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு 27 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை வழங்க பாணந்துறை உயர் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு 30 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த கொலை சம்பவமானது கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி சிறுமி தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்குச் சென்ற நிலையில் காணாமல் போனார். இதனையடுத்து, அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு வழங்கிய நிலையில் சிறுமி மறுநாள் (28) சேற்று நிலத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
விசாரணையில் நபரொருவர் இந்த சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நிலையில், சிறுமி சத்தமிட்டதால் அஞ்சி குறித்த நபர் சிறுமியை சேற்று நிலத்தில் மூழ்கடித்து கொலை செய்துள்ளதாக தெரியவந்தது.
குறித்த நபர் உயிரிழந்த சிறுமியின் தந்தையின் தோழர் எனவும் அவர் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு வரும் நபரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.