“அனைத்து மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து, மலையக மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகள் பாரபட்சமின்றி கிடைப்பதற்குரிய முறைமை ஒன்றை முன்வைக்க வேண்டும்.” என கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மட்டத்திலும் உள்ள மக்கள் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக குறை வருமானம் பெறுபவர்கள் தமது உணவு தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இச் சூழ்நிலையில் அரசாங்கம் விசேட நிவாரணங்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் இத்தகைய நிவாரணங்களை வழங்கும் போது, மலையக மக்களுக்கு பாராபட்சம் காட்டப்பட்டது. இந்நிலைமையை தவிர்த்துக் கொள்வதற்கு அனைத்து மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து, மலையக மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகள் பாரபட்சமின்றி கிடைப்பதற்குரிய முறைமை ஒன்றை முன்வைக்க வேண்டும்.
இந்திய அரசிடம் இருந்தும், குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்தும், இரண்டு பில்லியன் பெறுமதியான நிவாரண பொருட்கள் கிடைக்க பெற்றிருக்கின்றது. எமது நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைக்கு உதவும் விதமாக தமிழ் நாட்டு அரசே முன்வந்து இந்நிவாறான பொருட்களை பெற்றுத்தந்துள்ளது. இதனைவைத்து, குறுகிய அரசியல் வட்டத்திற்குள் வாத விவாதம் செய்து கொள்வது இந்நேரத்தில் பொருத்தமானது அல்ல. மக்களுக்கு தெளிவாக தெரியும் நிவாரண பொருட்கள் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பது. மக்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய பிரச்சினைகளுக்கு மத்தியில் சிறுபிள்ளைத்தனமான அரசியல் செயற்பாடுகள் மக்களுக்கு மேலும் கோபத்தை தூண்டுவதாகவே உள்ளது. சூழ்நிலையை புரிந்து கொண்டு மக்களுக்கான நிவாரணங்கள் பாரபட்சமின்றி கிடைப்பதர்க்குரிய வழிமுறையை ஏற்படுத்துவதே எமது கடப்பாடாகும். அதற்கான கலந்துரையாடலை மற்றும் செயற்பாடுகளை அரச தரப்போடு நாம் பேசி துரிதமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.
கடந்த காலத்தில் கோவிட் 19 நிவாரண வழங்களில் மலையகம் எங்கும் பாராபட்சம் காட்டப்பட்டது. ரூபா 5000 கொடுப்பனவில் பாரிய சிக்கல்கள் எழுந்தது. சில பிரதேசங்களில் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் ஓரம்கட்டப்பட்டனர். அத்தோடு ஒரு வீட்டில் அல்லது ஒரு லயன் அறையில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள் ஒரு அலகிற்குள் இருந்தாலும், தனிப்பட்ட குடும்பங்களாகவே தமது தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர். அவ்வாறான துணை குடும்பங்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டது.
இன்று உயிர் வாழ்வதற்கு மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இச்சூழலில் பாரபட்சமின்றி நிவாரணங்கள் கிடைக்கப்பெற்ற வேண்டும். அதற்கு தகுந்த வழிமுறை உருவாக்கப்பட வேண்டும். சமூகத்தில் பல்வேறு தரப்பினர்களையும் ஒன்றிணைத்து, இச் செயற்பாட்டை மேற்கொள்வது பொருத்தமாக அமையும். அதனை நாங்கள் உடனடியாக செய்ய வேண்டி உள்ளது. அதற்க்கு மாறாக, கட்சி சார்ந்த அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ள முயற்சித்தால் மக்களின் கோபம் எத்தகைய பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க முடியாது.