அரசின் முறையற்ற நிர்வாகத்தால் நாட்டில் பல பிரச்சினைகள்.

0
135

இந்த அரசின் முறையற்ற நிர்வாகம் காரணமாகவே நாட்டில் பல பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார.

நுவரெலியா – நானுஓயா கெல்சி தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒரு தொகை பொருட்கள் 30.01.2022 அன்று வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் காலத்தில் மாத்திரம் மக்களை தேடி வராது மக்கள் மத்திக்கு வந்து அவர்களுடன் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்ப்பது உண்மையான அரசியல். அத்தகைய அரசியலை நாம் இன்று முன்னெடுத்து வருகின்றோம்.

இன்று இந்த நாட்டில் பல பிரச்சினைகள் தலை விரித்து ஆடுகின்றன. இதற்கு இந்த அரசின் முறையற்ற நிர்வாகமும், உறுதியற்ற தீர்மானங்களுமே பிரதான காரணங்களாகும். மாறாக எல்லாவற்றையும் கொரோனா மீது சுமத்தி விட முடியாது.

இராசாயன உரத்தை தடை செய்து விட்டு சேதன பசளையை முன்னெடுக்கும் திட்டம் குறித்து ஒரே இரவில் முடிவு எடுக்கப்பட்டது. அதன் சாதக பாதக தன்மை ஆராயப்படவில்லை. இதனால் விவசாயத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கிய காலப்பகுதியிலேயே தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுமாறு எதிர்கட்சி தலைவர் ஆலோசனை வழங்கினார். அது குறித்து அரசு செவிசாய்க்கவில்லை. அப்போது கொள்வனவு செய்திருந்தால் குறைந்த விலையில் தடுப்பூசிகளை வாங்கிருக்கலாம்.

தாமதித்து எடுக்கப்பட்ட முடிவால் இன்று கூடிய விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. அதேபோல் தான் தற்போது இராசாயன உரத்திற்கும் கூடுதல் பணத்தை செலுத்தி கொள்வனவு செய்ய பார்க்கின்றனர்.

இப்படியான முறையற்ற நிர்வாக மற்றும் ஊழல்கலாலயே இலங்கைக்கு பின்னர் சுதந்திரம் பெற்ற பங்களாதேஷ்ஷிடம் கூட கடன் கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, மலையக அடையாளத்தை தொலைக்கும் விதத்தில் எம்மால் செயற்பட முடியாது. அந்த அடையாளம் இருப்பதால் தான் எமது மக்களுக்கு சலுகைகள் கிடைக்கபெறுகின்றன.

இந்நிலையில் மலையக அடையாளம் முக்கியமில்லை என்ற தொனியில் ஒரு இராஜாங்க அமைச்சர் பேசியிருந்தார். அதனை நாம் சுட்டிக்காட்டியதால் கைக்கூலிகளை பயன்படுத்தி முகநூலில் எனக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றார்கள் என்றார்.

க.கிஷாந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here