” சலுகைகளுக்காக மக்களை காட்டிக்கொடுக்கும் அமைச்சர்களே மலையகத்தில் இருக்கின்றனர். அதனால்தான் அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கப்படும் நிலையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு கோதுமை மா வழங்கப்படுகின்றது. இப்படியான அரசியல் வாதிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
பத்தனை – போகாவத்தையில் உள்ள கலாச்சார மண்டபத்தில் 20.02.2022 அன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.உதயகுமார் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
” நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. இதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரச ஊழியர்களுக்கு ஐந்தாயிரம் ரூபா வழங்கப்படும் நிலையில், தோட்டத்தொழிலாளர்களுக்கு அற்பதொகையில் கோதுமை மா வழங்கப்படுகின்றது. இது பெரும் அநீதியாகும். எமது மக்களை சிறுமைப்படுத்தும் செயலாகும்.
50 வருடங்களாக அரசியல் செய்வதாக மார்தட்டிக்கொள்கின்றனர். ஆனால் நல்லாட்சியின்போது அந்த நான்கரை வருடங்களில் தான் மலையகத்தில் மாற்றம் ஏற்பட்டது. கிராமங்கள் உருவாக்கப்பட்டன. காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. அதனை காட்போட் என சின்ன பையன் ஒருவர் விமர்சிக்கின்றார். அது பொய், அந்த உறுதிப்பத்திரத்தை வங்கியில் அடகு வைத்து, கடன் பெறலாம்.
எமது மக்களை ஏமாற்றி, அவர்களைக் காட்டிக்கொடுத்தே இவர்கள் செயற்படுகின்றனர். நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினால் தொழிலாளர்களை வேலைக்கு அனுப்புகின்றனர். இப்படியான காட்டிக்கொடுப்பாளர்களுக்கு மக்கள் தக்க பதிலை வழங்குவார்கள். தோட்ட மக்களின் வாழ்க்கை முறை தெரிந்த ஒருவரால் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நான் உங்களில் ஒருவன். எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே எமது இலக்கு .அந்த இலக்கை சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சியில் நிச்சயம் அடைவோம்.” – என்றார்.
க.கிஷாந்தன், மலைவாஞ்ஞன்