” இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை எதிர்வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளேன். இதன்போது மலையகத்தில் உள்ள பாடசாலைக்கான உதவித் திட்டங்கள் தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்படும்.” – என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் புஸல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)க்கு இன்று (07.12.2022) விஜயம் மேற்கொண்டிருந்தார். அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து அவருக்கு வரவேற்பளித்தனர்.
பாடசாலை அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் சமூகத்தினருடன், கல்வி நிலைமை குறித்து கலந்துரையாடியதுடன், பாடசாலைக்கு தேவையான உதவிகள் பற்றியும் கேட்டறிந்தார். பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பா. திருஞானமும் பங்கேற்றிருந்தார்.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார்,
” அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் சமூகத்தை சந்தித்தேன், குறைப்பாடுகளை கேட்டறிந்தேன். இப்பகுதியில் சரஸ்வதி மத்திய கல்லூரி முதன்மை பாடசாலையாக விளங்குகின்றது. தோட்டப்பகுதிகளை உள்ளடக்கிய வகையில் அமைந்துள்ள பழமையான – பாரம்பரியம்மிக்க இப்பாடசாலைக்கு உதவிகளை வழங்க வேண்டியது கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் எனது பொறுப்பாகும்.
எதிர்வரும் ஒன்பதாம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ளேன். இப்பாடசாலை பற்றியும் எடுத்துரைப்பேன். அதுமாத்திரமின்றி மலையகத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடவுள்ளேன்.” – என்றார்.
(க.கிஷாந்தன்)