நேற்றைய தினம் (01.12.2022) கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் அவர்கள், துணை இந்திய உயர் ஸ்தானிகர் Dr.ஆதிரா அவர்களுடன் கண்டியிலுள்ள துணை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.இதன்போது, கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கொட்டகலை மற்றும் வட்டகொடை பொது நூலகங்களுக்காக புத்தகங்கள் நன்கொடையளிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டமைக்காக நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டதுடன் மேலும், கொட்டகலை பிரதேச சபை எல்லையின் கீழுள்ள தேர்தல் தொகுதிகளில் தனியான நூலகங்களை அமைத்தல், தோட்டப்புறங்களிலுள்ள மருத்துவ நிலையங்களின் (Dispensaries) குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளல், அறநெறி பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காகத் தேவையான நூல்களைப் பெற்றுக்கொள்ளல் ஆகிய மூன்று அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக உதவி கோரப்பட்டு அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்திய வம்சாவளித்தமிழர்கள் இலங்கையில் குடியேறி இருநூறு ஆண்டுகள் பூர்த்தியடைதல் மற்றும் கண்டி இந்திய துணை உயர்ஸ்தானிராலயத்தின் நூறாண்டுப் பூர்த்தியை முன்னிட்டு இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்காக பல அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இந்தியத் துணை உயர் ஸ்தானிகரால் இதன்போது குறிப்பிடப்பட்டது.
மேலும், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முன்னெடுக்கப்படும் பல்வேறு புலமைப்பரிசில் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிள்ளைகளுக்கு தெளிவுபடுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்காகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
(க.கிஷாந்தன்)