காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் கட்டுப்பாடுடனும், முன்னுதாரணமாகவும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் சிலரின் செயற்பாடுகள் நாகரீகம் அற்றதாக உள்ளது. தனிப்பட்ட நபரின் செயற்பாட்டிற்காக ஒரு இனத்தை குறைகூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பு காலிமுகத்திடலில் இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் காலிமுகத்திடலில் அமைந்துள்ள அமரர் பண்டாரநாயக்கவின் சிலையின் மீது கறுப்பு நிற துணியினால் கட்டி இனவாதத்தை தூண்டும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இச்செயலானது நாட்டில் வன்முறையை தூண்டுவதற்காக அடிப்படைவாதி தமிழர்கள் இதை முன்னெடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளருமான தயாசிறி குற்றம் சாட்டியுள்ளார்.
தயாசிறி அவர்கள் ஒரு இனத்தை அடையாளப்படுத்தி குற்றம் சுமத்துவதை எதிர்காலத்தில் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.அந்த நபரின் கேவலமான செயற்பாட்டுக்கு அவரே முழு பொறுப்புக் கூற வேண்டும். அவருடைய இந்த கேவலமான செயலை நாங்களும் வன்மையாக
கண்டிக்கிறோம். தமிழர் தரப்பினர் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பொருளாதார பிரச்சினைக்கும் அமரர் பண்டாரநாயக்கவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாத போதிலும் அவர்களை அவமதிப்பது நாகரீகமற்ற செயல் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இ.தொ.கா வலியுறுத்துகின்றது.
மூவின மக்களும் காலிமுகத்திடலில் ஒற்றுமையாக இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றார்கள். நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியான சூழலில் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழிகளை கண்டறிய வேண்டுமே தவிர மேலும் மேலும் பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கான செயற்பாடுகளில் ஈடபடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Attachments area