எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இலங்கை இருளில் மூழ்கக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், மின் உற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் மட்டம் 75 சதவீதம் என கணிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் மழை வீழ்ச்சி குறைவடைந்தமையினால் எதிர்காலத்தில் நீர் மட்டம் குறைவடைவதற்கான ஏதுநிலைகள் உள்ளன.
இது, எதிர்காலத்தில் மின்சார உற்பத்திக்கு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும். தற்போது, நிலக்கரியை தாங்கிய 5ஆவது கப்பலே நாட்டை வந்தடைந்துள்ளது.
அது நிறைவடைந்தால் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாடு இருளில் மூழ்கக்கூடும்.
தற்போதைய நிலையில் நிலக்கரியுடனான 24 கப்பல்கள் நாட்டை வந்தடைந்திருக்க வேண்டும். எனினும், அதனை அரசாங்கம் தவறவிட்டுள்ளது.
எனவே, எதிர்காலத்தில் கடும் மின்சார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.