இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை எவராலும் அசைத்து விடமுடியாது – அழித்துவிடவும் முடியாது என்று காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் நேற்று (01.05.2022) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய செந்தில் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,
“ அன்று முதல் இன்றுவரை கொள்கை அடிப்படையிலேயே காங்கிரஸ் பயணிக்கின்றது. சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட காங்கிரஸின் உயரிய தலைவர்கள் காட்டிய வழியில் இருந்து நாம் மாறவில்லை. மக்களுக்காக மக்கள் பக்கம் நின்று, சரியான திசையில் முன்னோக்கி பயணிக்கின்றோம். இ.தொ.கா என்ற அமைப்பை எப்போதும் எவராலும் அழித்துவிடமுடியாது.
அமைச்சு பதவிகளுக்காக நாம் பேரம் பேசவில்லை. கடந்த காலத்தில் ஆளுங்கட்சியில் ஐந்து ஆண்டுகளாக சிலர் அரங்கேறியதுபோன்று இராஜினாமா கூத்துகளையும் அரங்கேற்றவில்லை. கட்சி கலந்துரையாடி முடிவை எடுத்துது. அரசிலிருந்து காங்கிரஸ் கம்பீரமாக வெளியேறியது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி, மலையகம் வந்தார். எம்மை நேரில் வந்து சந்தித்தார். தற்போது தமது பிரதிநிதிகளை அனுப்பி வைத்துள்ளார். மலையக மக்களுடன் நாங்கள் இருக்கின்றோம் என்ற செய்தியை பாரத பிரதமர் வழங்கியுள்ளார். பல கூட்டங்களை இரத்து செய்துவிட்டு, மலையக மக்களுக்காக இங்குவந்த பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எங்கள் நன்றிகள். “ – என்றார்.
க.கிஷாந்தன்