இலங்கையின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய உதவுமாறு இந்தியாவிடம் இ.தொ.கா கோரிக்கை!

0
105

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உதவிகளை செய்வதற்கு இந்தியா தொடர்ந்து முன்வர வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் திரு. கே.அண்ணாமலை அவர்களிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கிணங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடி, இலங்கைக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக திரு. அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மின்சாரத் துண்டிப்பும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் பொதுமக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் இந்தியாவின் உதவிகள் தொடர்ந்து இலங்கைக்கு கிடைக்க வேண்டுமென்று இ.தொ.கா தலைவர் வலியுறுத்தினார்.

இலங்கை தற்போது முகங்கொடுத்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழக பாஜக தலைவர் திரு. கே.அண்ணாமலை அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here