கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 53 குழந்தைகளில் 11 பேர் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள், என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு காரணமாக சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் நால்வருக்கு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு நோய்க்கான அறிகுறிகள் காட்டியதாகவும், அந்த குழந்தைகளுக்கு விசேட ஊட்டச்சத்து உணவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அண்மைய நாட்களில் 100க்கும் அதிகமான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பதிவாகியுள்ளதாகவும், கொவிட் நோயின் போது மன அழுத்தம் மற்றும் உடல் உழைப்பின்மை ஆகியவை பிள்ளைகளின் நீரிழிவு நோய் தாக்கத்திற்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என நம்பப்படுவதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் இருந்து தத்தமது குழந்தைகளை காப்பாற்ற பெற்றோர்கள் வீட்டுத்தோட்ட செய்கையில் அதிக கவனம் செலுத்துவதுடன், குறுகிய காலத்தில் விளையக்கூடிய சத்துமிக்க உணவு வகைகளை பயிரிடுவதில் கவனம் செலுத்த வேண்டும், என்றும் அவர் குறிப்பிட்டார்.