இலங்கை வரலாற்றில் முதன்முறையாக லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு கிராமத்தில் வாழும் உரிமை வழங்கப்படுகிறது!

0
55

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு கிராமமொன்றில் வாழ்வதற்கான உரிமை வழங்கப்படும் எனவும், அதற்காக தோட்டக் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள லயன் அறைகள் இருக்கும் காணிகளின் குத்தகை ஒப்பந்தங்கள் இரத்துச் செய்யப்பட்டு அந்தக் காணிகளை அரசாங்கம் மீள சுவீகரிக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் எனவும், வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் உதவியளிக்கும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, அவற்றுக்கு அண்மித்த பகுதிகளில் விளையாட்டு மைதானம் போன்ற பொது இடங்களை உருவாக்கக்கூடிய காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கும் எனவும் குறிப்பிட்டார்.நுவரெலியா மாவட்ட வர்த்தகர்களுடனான சந்திப்பு நேற்று முன்தினம்  (10) அட்டனில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

நுவரெலியா வர்த்தக சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டதுடன், பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான பல யோசனைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரியான வேலைத்திட்டத்துடன் நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக அங்கு கூடியிருந்த நுவரெலியா மாவட்ட வர்த்தக சமூகத்தினர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளருமான கே. கே. பியதாச, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் டபிள்யூ. ஜி. ரணசிங்க, ஹட்டன் – டிக்கோயா முன்னாள் மேயர் எஸ். பாலச்சந்திரன், ஹட்டன் வர்த்தக சங்க செயலாளர் எஸ். சோமசுந்தரம் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நுவரெலியா மாவட்ட கல்விசார் நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நேற்று (10) அட்டனில் தனியார் விருந்தகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனை மாற்ற இடமளிக்க முடியாது எனத் தெரிவித்த நுவரெலியா மாவட்ட கல்விசார் நிபுணர்கள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது நாட்டை நேசிக்கும் அனைவரினதும் பொறுப்பு என சுட்டிக்காட்டினர்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மலையகத் தமிழ் மக்களுக்கு சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக அடுத்த வருடம் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் மாநாடொன்று கூட்டப்படும் என குறிப்பிட்டார்.அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள சமூக நீதி ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை விரிவாக ஆராய சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நுவரெலியா மாவட்ட தொழிலதிபர்களினதும், தொழில் வல்லுநர்களினதும் பிரச்சினைகள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன் அதற்கான தீர்வுகள் அடங்கிய பிரேரணையும் முன்வைக்கப்பட்டது.ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினமான வடிவேல் சுரேஷ் இந்த நிகழ்வில் உரையாற்றியதோடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அன்று முதல் பெருந்தோட்ட மக்களுக்காக பல பணிகளை செய்துள்ளதோடு, அந்த மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் அவர் எதிர்காலத்திலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவார் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட இந்து பூசகர்கள் குழுவின் தலைவர் வேலு சுவிஸ்வர சர்மா மற்றும் தொழில் வல்லுனர்கள் குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here