கடந்த காலத்தில் அரசியல் ஆசைக்காக தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து அங்கு கையாலாகமல் போனதால் இ.தொ.காவோடு இணைந்து மாகாணசபைக்கு சென்று பின்னர் மலையக உதயமென கட்சியொன்றை ஆரம்பித்து அதுவும் கைக்கொடுக்காத நிலையில் பின்னர் ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவி அங்கும் ஒன்றும் நடக்காத காரணத்தால் தன் அரசியல் ஆசைக்காகவும் பதவி மோகத்துக்காகவும் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து தட்டுதடுமாறி பாராளுமன்றம் சென்ற உதயா எனும் உதயகுமார் பாய்ந்த பாய்ச்சலை விட இ.தொகா முதுகெழும்போடும் கம்பீரமாகவும் மக்களிடத்தில் வலம் வந்து கொண்டிருப்பதாக இ.தொ.காவின் உபத்தலைவர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ம.உதயகுமார் இ.தொ.காவுக்கு எதிராக வழங்கிய உரைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.அக்கரப்பத்தனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்விடயத்தை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்
உதயகுமார் அரசியல் இருப்புக்காக பாய்ந்த பாய்ச்சல்களை மக்கள் நன்கு உணர்வர்.மக்களின் பொருளாதார சுமையையும் இப்போதுள்ள சூழ்நிலையும் மக்களின் உணர்வுகளையும் வைத்து அரசியல் பிழைப்பு தேடும் உதயாவை போன்றவர்களை மக்கள் மீண்டும் துரத்தியடிக்க வேண்டும்.இவ்வாறானவர்களே சமூகத்தையும் மக்களையும் அரசியலுக்காக அடமானம் வைக்கின்றவர்கள்.
இ.தொ.கா முதுகெலும்புள்ள கட்சி என்பதை அன்றும் இன்றும் நிரூபித்து கொண்டுதான் இருக்கின்றது.அதனால் தான் அரசாங்கத்திலிருந்து இராஜாங்க அமைச்சையும் மக்களுக்காக தூக்கியெறிந்து மக்களோடு மக்களாக போராட இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வெளியில் வந்தார்.அதோடு நீங்கள் கொண்டுவருகின்ற நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இ.தொ.கா ஆதரவளிக்க வேண்டுமென கட்டாயமில்லை.அதனால் தான் நடுநிலை வகித்தோமே தவிர அமைச்சு பதவிக்காகவோ அல்லது அற்ப சலுகைக்காகவோ இ.தொ.கா இவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை.நாங்கள் மக்கள் கட்சி என்றும் மக்களோடு தான் இருப்போம் என குறிப்பிட்டார்.