இ.தொ.கா மக்களுக்கு சேவையாற்ற கூடிய ஒரு அமைச்சை பெறும்

0
72

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் தேசிய அரசாங்கம் ஒன்று அமைய இருக்கின்றது. அந்த தேசிய அரசாங்கத்தில் நிச்சயமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு மக்களுக்கு சேவையாற்ற கூடிய அமைச்சை பெறும். அது ஒரு தேசிய அமைச்சாகவும் இருக்கலாம்.

மலையக மக்களின் அபிவிருத்தியில் மிகவும் ஒரு முக்கிய பங்களிப்பை செலுத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்வரும் அரசாங்கத்தில் சேவை செய்யக்கூடிய ஒரு அமைச்சை தான் பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.பி.சக்திவேல் தெரிவித்தார்.

கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இன்று (11.09.2022) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெருந்தோட்டப்பகுதிகளில் பல வருடங்களாக வாழ்ந்து வரும் மக்கள் பராமரித்து வந்த காணிகளில் வீடுகள் நிர்மாணிக்கும் பொழுதும், விவசாயம் செய்யும் பொழுதும் அந்த மக்களுக்கு தெரியாமலேயே தோட்ட நிர்வாகம் தான்தோன்றிதனமாக அரச சொத்தை மீள பெறல் என்ற சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த மக்களை வெளியேற்றுகின்றனர். இவ்வாறு தோட்ட நிர்வாகம் செய்வது உரிமை மீறலாகும்.

மக்களை இவ்வாறு வெளியேற்றும் செயல் குறித்து பல முறைபாடுகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட எம்.பியுமான ஜீவன் தொண்டமானுக்கு அண்மையில் கிடைக்கப்பெற்றிருந்தது.

அதன்பின்னர், அவரின் ஆலோசணைக்கேற்ப இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரான நான் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன், இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினேன். அதன்போது ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கப்பெற்றது.

அதாவது, எவரையும் தோட்ட நிர்வாகம் நினைத்தப்படி வெளியேற்ற முடியாது. இது தொடர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரண படிவம் ஒன்றை தயாரித்துள்ளார். அந்த படிவத்தில் குறிப்பிட்டுள்ள சில விடயங்களுக்கு பதிலளிக்க வேண்டும். அதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும்.

பெருந்தோட்டத்துறை அமைச்சரின் அனுமதி இன்றி நீண்ட காலமாக வாழ்பவர்களை எக்காரணத்தையும் கொண்டு வெளியேற்ற முடியாது என்ற ஒரு சுற்று நிருபத்தை அவர்கள் மிகவும் தெளிவாக அந்த அமைச்சின் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்கள்.

தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக தோட்ட நிர்வாகத்தால் வழக்கு தொடரப்படுமானால், நீங்கள் எவ்வளவு காலம் காணியில் வசித்து வந்துள்ளீர்கள், அதற்கான ஆவணங்கள் இருக்கின்றதா என்பதை தோட்ட நிர்வாக பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும் அல்லது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆலோசனையை பெற்று அதன்பின்னர் செயற்பட வேண்டும்.

தோட்ட நிர்வாகம் தேயிலை மரங்களை உரிய முறையில் பராமரிப்பதில்லை. மருந்து தெளிப்பதில்லை, உரம் இடுவதில்லை, அங்குள்ள மரங்களை வெட்டி விற்பனை செய்து வருகின்றார்கள். தேயிலை மரங்களுக்கு எவ்வித போசாக்களும் செலுத்தாமல் தொழிலாளர்களிடம் 20 கிலோ அல்லது 25 கிலோ பறித்து தருமாறு தோட்ட நிர்வாகம் கோருகின்றார்கள். தொழிலாளர்களுக்கு ஞாயிறு தினங்கள் மற்றும் போயா தினங்களில் ஒன்றரை பெயர் வழங்கப்பட வேண்டும். அதையும் தோட்ட நிர்வாகம் செய்வதில்லை.

இவ்வாறான கெடுபிடிகளுக்கு இலங்கை தொழலிளார் காங்கிரஸ் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு சம்மந்தமாக அரசாங்கத்தின் வர்த்தமானிக்கு எதிராக ஆயிரம் ரூபா வழங்க முடியாது என கம்பனிகாரர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்கள்.

தற்போது வழக்கு தாக்கல் செய்த அந்த 22 கம்பனிகளின் கோரிக்கையை தள்ளுப்படி செய்து ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதன்படி, கைகாசுக்கு தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கும் மற்றும் நிரந்தரமாக தொழிலை செய்யும் தொழிலாளர்களுக்கும் ஆயிரம் ரூபா கட்டயமாக வழங்க வேண்டும். இது தொடர்பில் பல்வேறு சிக்கல்களும், பிணக்குகளும் இருக்கின்றது.

எனவே, தொழிலாளர்கள் இந்த விடயம் தொடர்பில் எமது கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதேநேரம், தேயிலை கொழுந்து இல்லாத பட்சத்தில் 20 கிலோவிற்கு மேல் தொழிலாளர்கள் பறிக்க வேண்டும் என தோட்ட நிர்வாகம் இனிமேல் பணிக்க முடியாது என்றார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here