உக்ரைனின் முக்கிய நகரங்களான கிவ் மற்றும் இரண்டு நகரங்களின் மீது, ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டின் தலைநகரான கிவ் மீது, நேற்று இரவு ரஷ்யா தாக்குதல் நடத்தியதை அடுத்து, நகரில் குடியிருக்கும் மக்கள் வெளியேறுமாறு, அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் மேற்கு நகரமான க்மேல்னிட்ஸ்கியில் உள்ள அதிகாரிகள், ரஷ்ய இராணுவம் இரவோடு இரவாக உக்ரைனின் இராணுவ தளவாடங்களை தாக்கி, ஐந்து விமானங்களை சேதப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 11.00 மணி முதல் கிய்வ் நகரில், குறைந்தது 10க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
உக்ரைனின் மத்திய மாவட்டங்களில் குண்டு வெடிப்பு நடந்ததாகவும், பகலில் இது போன்ற தாக்குதல் அரிதாகவே நடக்கும் எனவும், மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறியுள்ளார்.
இது இந்த மாதத்தில் மட்டும் இது 15வது வான்வெளி தாக்குதல் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே நேற்று உக்ரைனின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி வலேரி ஜலுஷ்னி சமூக ஊடகங்களில்,
”மொத்தம் 40 ஏவுகணைகள் மற்றும் சுமார் 35 ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் 37 ஏவுகணைகள் மற்றும் 29 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும்” கூறியுள்ளார்.
இந்நிலையில் உக்ரைனுக்கு F-16 போர் விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதை அடுத்து, மேற்கு நாடுகள் போரை ஊக்குவிப்பதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை அடுத்து உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிராக தாக்குதலை தொடங்கத் தயாராகி வருகிறது, இருப்பினும் உலக நாடுகளிடமிருந்து அதிக ஆயுதங்கள் தேவை, என உக்ரேனிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.