உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஏழு நாடுகளுக்கு இலவச விசா

0
89

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு இலவச விசா நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாதொழிலை கட்டியெழுப்பும் முகமாகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி 2024.03.01 ஆம் திகதி வரை சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இராஜதந்திர, உத்தியோகபூர்வ, பொது அலுவல்கள், சேவைகள் மற்றும் ஆரம்ப கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கும் மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளின் பிரஜைகள் இந்தத் திட்டத்தின் கீழ் கட்டணம் இன்றி இலவசமாக வீசாவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

2024.03.31 ஆம் திகதி வரை மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளின் பிரஜைகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் கட்டாயம் இலத்திரனியல் பயண அனுமதிக்காக (ETA) விண்ணப்பித்து அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும். இதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது.

இந்த திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகள் 30 நாட்கள் கட்டணம் இன்றிய இலவச வீசா காலத்தை அனுபவிக்க முடியும். அத்தோடு இலங்கைக்கு வருகைத்தந்த முதல் நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இருமுறை நுழைவு வசதி வழங்கப்படுகின்றது.

இந்தத் திட்டத்தின் கீழ் இலவச இலத்திரனியல் பயண அனுமதிக்கு (ETA)2024.03.31 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும்.

வருகை தந்த நாளில் இருந்து 30 நாட்களுக்கான இந்த இலவச இலத்திரனியல் பயண அனுமதி (ETA)காலம் 2024.03.31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் முடிவடையும் சந்தர்ப்பத்தில் விண்ணப்பதாரி மேலும் வீசா நீடிப்பைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார். எனினும், 2024.03.31 ஆம் திகதிக்குப் பின்னர் வீசாவின் 30 நாள் இலவச செல்லுபடிகாலம் முடிவடையும் சந்தர்ப்பத்தில்அதற்கான வீசா கட்டணத்தைச் செலுத்தி நீடிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

தயவுசெய்து மேலே குறிப்பிடப்பட்ட ஏழு நாடுகளின் பிரஜைகளுக்கு மாத்திரம் இந்த விசேட இலவச வீசா திட்டம் நடைமுறையில் இருக்கும் என்பதை கவனத்திற்கொள்ளவும். ஏனைய நாட்டுப் பிரஜைகள் இலத்திரனியல் பயண அனுமதிக்கு (ETA) விண்ணப்பிக்கும் போது நடைமுறையிலுள்ள பொதுவான நடைமுறைகள் மற்றும் விதிகளைப் பின்பற்றுதல் வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here