லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் திடீரென ஏற்பட்ட தீ பரவல் காரணமாக ஸ்தலத்திலேயே உடல் கருகி பலியானதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் லிந்துலை லெமினியர் தோட்டத்தைச் சேர்ந்த 74 வயதான மருதெய்வீரன் பெருமாள் எனவும் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
லிந்துலையில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல்காரராகப் பணிபுரிந்து வந்த இவர், வழமை போன்று சமைத்துக்கொண்டிருந்தபோது உடலில் தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்தின் போது உணவகத்தில் எவரும் இருக்கவில்லை எனவும், உணவகத்தின் உரிமையாளர் உணவகத்திற்கு வந்த போது சமையல்காரர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வரும் நிலையில் பிரேத பரிசோதனைகளுக்காக சடலமானது நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
க.கிஷாந்தன்