விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வட்டார ரீதியாக வேட்பாளர்களை நிறுத்துவதற்கு தொழிலாளர் தேசிய சங்கம் வியூகம் அமைத்துள்ளது. தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைப்பதா என்பது தொடர்பான விபரம் விரைவில் வெளியாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய ரீதியில் பல தலைவர்கள் தோல்வி கண்டும் அரசியலை விட்டும் ஒதுங்கியுள்ள நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் தலைவர் திகாம்பரம் மீதும் அவரின் சேவைகள் மீதும் நம்பிக்கை வைத்து 48 ஆயிரம் பேர் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளார்கள். எனவே, மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப எமது சேவை தொடர்ந்து வருகின்றது. அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு நிரந்தரமான ஒன்றல்ல. கடந்த காலங்களில் அதல பாதாளத்தில் வீழ்ந்தவர்கள் மீண்டும் தலைதூக்கிய வரலாறுகளை நாம் மறந்து விடக் கூடாது. எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து எமது அரசியல் பயணத்தை முன்னெடுப்போம்.
நாட்டில் எதிர்பார்க்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ளது. எனவே, நாம் தேர்தலுக்குத் தயாராக வேண்டியதன் அவசியத்தையும் அதற்கான வியூகத்தையும் தலைவர் திகாம்பரம் உயர்பீடத்துக்கு வலியுறுத்தியுள்ளார். வட்டார ரீதியில் பொருத்தமான வேட்பாளர்களை நிறுத்துவதற்கும் அவர்களின் வெற்றிக்கும் நாம் திட்டமிட்டு செயற்பட வேண்டும்.
ஏனைய தேர்தல்களை விட உள்ளூராட்சித் தேர்தல் வித்தியாசமான ஒன்றாகும். அடித்தள மக்களோடு நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது. அந்தளவு மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்காக சேவை செய்யக் கூடியவர்களையும், பிரச்சினைகள் ஏற்பும் போது முன்வந்து குரல்கொடுத்தும், களத்தில் இறங்கியும் பணியாற்றக் கூடிய வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும். இதற்கு முன்னர் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்று மக்களுடன் இருந்தவர்களை அவர்கள் கைவிட மாட்டார்கள் என்றாலும், அவர்களின் வெற்றி மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளூராட்சித் தேர்தலில் இளைஞர், யுவதிகளுக்கு முன்னுரிமை தரப்படவுள்ளது. உண்மையாக சேவை செய்தவர்களை மக்கள் நிராகரிக்கமாட்டார்கள் எனினும், முயற்சியைக் கைவிடக் கூடாது. தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது. தனித்தா கூட்டுச் சேர்ந்தா என்பது விரைவில் தெரிய வரும் என்றார்.