எதிர்வரும் சில தினங்களுக்கு வரட்சியான வானிலை நீடிக்கும் என எதிர்வு கூறியுள்ள வானிலை அவதான நிலையம், இந்த வானிலையுடன், அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான வானிலையும் நீடிக்குமென்றும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மாலை 2 மணிக்குப் பின்னர் மழையுடன் கூடிய வானிலை காணப்படுமென்றும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களில், காலை வேளையில் பனிமூட்டம் அதிகரித்துக் காணப்படுமென்றும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.
அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் அதிகரித்துக் காணப்படும் என்பதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனத்தைச் செலுத்துமாறும் முன்விளக்குகளை ஒளிரவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வரட்சியான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 90,381 குடும்பங்களைச் சேர்ந்த 288,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக புத்தளம் மாவட்டத்திலேயே அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் மட்டும், 66,436 குடும்பங்களைச் சேர்ந்த 216,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென மேற்படித் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குருநாகல் மாவட்டத்தில், 17,194 குடும்பங்களைச் சேர்ந்த 216,018 பேரும் அநுராதபுர மாவட்டத்தில் 3,189 குடும்பங்களைச் சேர்ந்த 9,655 பேரும், பொலன்னறுவை மாவட்டதில் 250 குடும்பங்களைச் சேர்ந்த 990 பேரும், மன்னார் மாவட்டத்தில் 3,312 குடும்பங்களைச் சேர்ந்த 16,612 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரட்சியால், மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட நீர்நிலைகளில் நீர் வற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.