எனக்கு “இன நல்லிணக்க டியூசன்” வேண்டாமே- முஸ்லிம் உடன்பிறப்புகளின் மனசாட்சியை நோக்கி; அமைச்சர் மனோவின் ஆதங்கம்!

0
107

நான் பொதுவாக இந்நாட்டின் எல்லா இனவாதங்களையும் பற்றி சொன்னவற்றில் ஒன்றை மட்டும் தேடி பொறுக்கி எடுத்து, நான் சொல்லாத அர்த்தத்தை சொல்லியதாக திரித்து, புரிந்துக்கொண்டு, அதை பெருத்து பூதாகரமாக்கி, எனக்கு இப்போது “நல்லிணக்க டியூசன் எடுக்கும் சில நண்பர்களுக்கு;

இன்று, முஸ்லிம் சகோதர்களின் பிரச்சினை பற்றி ஐநா மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசைன் பேசுகிறார். நல்லது.

இலங்கையில் இருந்து முஸ்லிம் சமூக நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் ஜெனீவாவுக்கு, தூதுக்குழுக்களை அனுப்பி, இலங்கையின் சட்டம், ஒழுங்கு சீர் குலைவு தொடர்பில் புகார் செய்கின்றன. நல்லது.

இலங்கை வரும் ஐநா மற்றும் சர்வதேச பிரதிநிதிகளிடம் முஸ்லிம் அமைச்சர்கள், தலைவர்கள் நிலைமையை எடுத்து கூறுகின்றார்கள். நல்லது.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களிடம் புகார் செய்கின்றார்கள். நல்லது. தூதுவர்களும் தம் கண்டனங்களை, கவலையை அரசுக்கு தெரிவிக்கிறார்கள். நல்லது.

சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள், இலங்கையில் முஸ்லிம் உடன்பிறப்புகள் மீதான வன்முறை பற்றி பேச வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன. நல்லது.

உலகின் பல நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த இலங்கை முஸ்லிம் சகோதர்கள், உலக தலைநகரங்களில் இருந்தப்படி இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். நல்லது.

ஆனால், இதையேதானே அய்யா, 2009ம் வருடம் யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு நிராதரவான தமிழர்கள், கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளுக்கு நியாயம் வேண்டி சர்வதேச சமூகத்தை நாடி, செய்தார்கள்.

புலம் பெயர்ந்த தமிழர், தாயக உறவுகளுக்காக, உலக தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

அவ்வேளையில் தமிழருக்கு ஆதரவாக எம்மோடு நானறிய சிறிதுங்க ஜயசூரிய, விக்கிரமபாகு கருணாரத்ன, நிமல்கா பெர்னாண்டோ, பிரிட்டோ பெர்னாண்டோ, பிரியானி குணரத்ன போன்ற முற்போக்கு மற்றும் மனித உரிமை சிங்கள நண்பர்கள் மட்டுமே தெருவில் இறங்கினார்கள்.

ஆனால், அந்நேரம், இலங்கை வாழ முஸ்லிம் அரசியல் சமூக தலைவர்கள் எங்கே இருந்தார்கள்?

நிராதரவான தமிழருக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. சர்வதேச சமூகத்தை நாடிய தமிழரை, தேசத்துரோகிகள் என பட்டம் சூட்டும் இடத்தில் இருக்கவில்லையா?

ஐநா மனித உரிமை ஆணைக்குழு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊர்வலம் போகவில்லையா?

மகிந்த அரசுக்கு ஆதரவு தெரிவித்து, ஐநா சபையை, சர்வதேச சமூகத்தை, எதிர்த்து கடையடைப்புகள் செய்யவில்லையா?

அன்றைய மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளையை எதிர்த்து பேரினவாதிகள் நடத்திய கோமாளி எதிர்ப்புகளில் பங்கு பற்றவில்லையா?

ஒரு சிலர், சில அடி முன்னோக்கி போய் தமிழ், சிங்கள முரண்பாட்டை தம் நலனிற்கு பயன்படுத்த முனைய வில்லையா?

ஏனையோர் பரிதவித்த தமிழரின் ஜனநாயக அரசியல் சமூக தலைவர்களால், (கவனிக்க: புலிகளின் ஆயுத போராட்டம் அல்ல..!) நடத்தப்பட மனித உரிமை போராட்டத்துக்கும், தமக்கும் எந்தவித சம்பந்தமுமே இல்லை என்பது போல் ஒதுங்கியே இருக்க வில்லையா?

ஆக, 2010-2015 மகிந்த ஆட்சி காலத்தின் இறுதிப்பகுதியில், ஞானசாரர் முஸ்லிம் உடன்பிறப்புகளின் உடை, உணவு, மத விழுமியங்கள் ஆகியவற்றின் மீது அரச ஆசீர்வாதத்துடன் நேரடி தாக்குதல் நடத்த தொடங்கிய பிறகு தான், முஸ்லிம் அரசியல் சமூக தலைவர்கள், அரசியல் கட்சிகள் போராட்ட உணர்வு பெற்றார்கள்.

அவ்வேளையில் நான், “பழைய வரலாற்றை’ சுட்டிக்காட்டி, ஒதுங்கி இருக்கவில்லையே? நீங்கள் எமக்காக போராடவில்லையே! அன்று எம்மை தேச துரோகிகள் என்றீர்களே! என்றெல்லாம் சுட்டிக்காட்டி குறுகிய நோக்கில் நடந்துக்கொள்ள வில்லையே?

உண்மையில் நண்பர் ஆசாத் சாலி, கிழக்கில் இருந்து, விஷயம் தெரியாத, சுமார் இரண்டு ஆயிரம் முஸ்லிம் சகோதரர்களை கொழும்புக்கு அழைத்து வந்து, வெள்ளை உடை உடுத்தி, மிகப்பெரும் அரச ஆசீர்வாத ஊர்வலத்தை, மிக முக்கியமான ஒரு ஐநா மனித உரிமை ஆணைக்குழு தீர்மான தினத்தில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசின் வழிகாட்டலின்படி, என் தேர்தல் மாவட்டம் கொழும்பின் காலி வீதியில், பம்பலபிட்டி முதல் கொள்ளுப்பிட்டி வரை நடத்தினார்.

அதை நான் மிக கவலையுடன், ஆதங்கத்துடன், அமைதியாக பார்த்துகொண்டு இருந்தேன்.

பின்னர் அதே “அரச ஆசீர்வாதம்”, ஞானசாரருக்கு வழங்கப்பட்டது.

பின் நிலைமை மாற, அதே ஆசாத் சாலிதான் அக்கால கட்டத்தில், இலங்கை முஸ்லிம்களின் மிகப்பெரும் போராட்ட வீரராக வலம் வந்தார். நானும், விக்கிரமபாகுவும் அவருக்கு தேவையான ஆதரவை துணிச்சலுடன் வழங்கினோம்.

ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் தொடர்ச்சியாக நாம் மூவரும் சேர்ந்து கொழும்பில் வாராந்த அரச எதிர்ப்பு ஊடக மாநாடுகள் நடத்தினோம். போரட்டங்கள் நிகழ்த்தினோம். அதை கொழும்பு உடகவியலாளர்கள் அனைவரும் அறிவார்கள். (ஆனால், அப்போதும் பிரபல முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மகிந்த அரசுக்கு உள்ளே அமைச்சர்களாக இருந்தார்கள்..!)

ஆனால், நான், முஸ்லிம் மக்கள் எம் உடன்பிறப்புகள் என்றுதான் அப்போதும் இப்போதும் நினைத்து நடக்கிறேன். என்னிடம் இந்த சில்லறை சின்னத்தன இனவாதம் எப்போதும் இல்லை. ஆகவே எனக்கு “இன நல்லிணக்க டியூசன்” வேண்டாமே..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here