இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணம் பேரதிர்ச்சியளிக்கின்றது. ஒரு துடிப்பான இளம் அரசியல்வாதியாக மக்களுக்கு சேவைகளை முன்னெடுத்த அவரின் மரணம் பேரிழப்பாகும் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,“ இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும், அவரின் மெய்பாதுகாவலரும் உயிரிழந்துவிட்டனர் என்ற செய்தியை கேள்வியுற்றதும் அடைந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் இன்னும் மீளமுடியவில்லை.
எனது அமைச்சில் இராஜாங்க அமைச்சராக புரிந்துணர்வுடனும், நட்புறவுடனும் செயற்பட்டவர் அவர், மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்ற உறுதியான கொள்கையுடன் செயற்பட்டவர்.
புத்தளம் மாவட்ட மக்களுக்காக மட்டுமின்றி முழு நாட்டுக்கும் சேவையாற்றியவர். மலையக மக்கள் தொடர்பிலும் புரிந்துணர்வுடன் செயற்பட்ட எனது சிறந்த நண்பர்.அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்துடன், உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” என்றுள்ளது.