மக்கள் வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்தின் தீர்மானங்களில் நாங்கள் ஈடுபடவில்லை என்று தெரிவித்தார்.
“இன்று இந்த நாடு உணவு உட்பட பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்புடன் மக்கள் அரசியல்வாதிகளை நிராகரித்து வெகுஜன போராட்டங்களை நாடுகிறார்கள்.
13 கட்சிகள் இணைந்து இந்த அரசாங்கத்தை அமைத்த போது நானும் தலைவராக நியமிக்கப்பட்டேன், ஆனால் அதன் பின்னர் நான் எதிலும் ஈடுபடவில்லை. சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தின் பின்னர் எனது அரசாங்கம் மாத்திரமே இந்த நாட்டுக்கு சரியான கொள்கையை கொண்டு வந்தது.
நான் நாட்டை ஜனநாயக ரீதியில் வழிநடத்தினேன். உலக நாடுகள் அனைத்தும் எனக்கு உதவியது.19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டினேன். ஆனால் ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்புவேன் என்று எதிர்பார்த்தபோதும் என்னால் அதைச் செய்ய முடியவில்லை“ என்றார்.