என்று வரும் மண்ணெண்ணை என்ற ஏக்கத்தில் மலையக மக்கள் நீண்ட வரிசையில் ஒவ்வொரு நாளும் காத்திருக்கின்றனர். மண்ணெண்ணை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்று (15) அதிகாலை மூன்று மணி முதல் ஹட்டன் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள எண்ணை நிரப்பு நிலையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
ஹட்டன் பகுதியில் உள்ள மூன்று எண்ணை நிரப்பு நிலையங்களில் குறித்த எண்ணை நிரப்பு நிலையத்தில் மாத்திரமே மண்ணெண்ணை பெற்றுக்கொடுக்கப்பட்டன.
எனினும் கடந்த வாரம் குறித்த எண்ணை நிரப்பு நிலையத்தில் பெற்றுக்கொடுக்கப்பட்ட போதிலும் போதுமான அளவு மண்ணெண்ணை குறித்த எண்ணை நிரப்பு நிலையத்திற்கு பெற்றுக்கொடுக்கப்படாததன் காரணமாக அனைவருக்கும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். குறித்த எண்ணை நிரப்பு நிலையங்களுக்கு எப்போது எண்ணை பெற்றுக்கொடுக்கப்படுகின்றன.என்ற தகவல் சரியாக உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படாததன் காரணமாக பொது மக்கள் இவ்வாறு அடிக்கடி வரிசையில் நின்று ஏமாற்றத்துடன் செல்லும் நிலையே காணப்படுகின்றன.
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பின் காரணமாகவும்,தட்டுப்பாடு காரணமாகவும் அதிமான மக்கள் மண்ணெண்ணை அடுப்பினையே பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் மலையகப் பகுதியில் மண்ணெண்ணை பாவனை அதிகரித்துள்ளன. இதனால் தங்களுக்கு தேவையான மண்ணெண்ணையினை பெற்றுக்கொள்வதற்காக தங்களது அன்றாட நடவடிக்கைகளையும் இழந்து மக்கள் முண்டியடுத்து வரிசையில் நிற்பதனை காணக்கூடியதாக உள்ளன.
குறித்த வரிசையினை குறைப்பதற்கு ஏனைய இரண்டு எண்ணை நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுகின்றனர். இதே நேரம் கடந்த சில தினங்களாக பெற்றோல் மட்டும் டீசல் பெற்றுக்கொள்வதற்காக கொட்டகலை, ஹட்டன், தலவாக்கலை, நோர்வூட் உள்ளிட்ட பல எண்ணை நிரப்பு நிலையங்களில் வாகனங்களை நீண்ட வரிசையில் தரித்து வைத்து சாரதிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் காத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்