” என் உயிரிலும் மேலான மக்கள் செல்வங்களை எனக்கு தந்துவிட்டே, எனது தந்தை விடைபெற்றுள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், எதிரணியில் இருந்தாலும் மக்களுக்கான எனது சேவைகள் தொடரும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மலையகத் தமிழர்களின் அரசியல் காவலனாக கருதப்படும் ,அமரர் ஆறுமுகன் தொண்டமானின், 58 ஆவது ஜனன தினம் இன்றாகும்.
இதனை முன்னிட்டு கொட்டகலை சி.எல்.எவ் வளாகத்தில் மலரஞ்சலி, புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
தெரிவுசெய்யப்பட்ட சில பாடசாலகளுக்கு மடிக்கணினிகளும், ‘போட்டோ கொப்பி மெசின்’களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜீவன் தொண்டமான்,
“அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வெற்றிடத்தை எவராலும் நிரப்பமுடியாது. மக்களை மட்டுமே எனக்கு தந்துவிட்டு சென்றுள்ளார். அது போதும். அதுவே மிகப்பெரிய செல்வம். எனவே, எனது மக்களுக்காக என்னால், எமது ஸ்தாபனத்தால் செய்யக்கூடிய அனைத்தையும் நிச்சயம் நான் செய்வேன்.
அரசாங்கத்தில் பதவிகளை வகித்தாலும், இல்லாவிட்டாலும்கூட மக்களுக்கான சேவைகள் தொடரும்.
குடும்பம் என்றால் பிரச்சினைகள் இருக்கவே செய்யும். எமக்குள்ளும் பிரச்சினைகள் இருக்கலாம். அவற்றை பேசி தீர்க்கலாம். அதைவிடுத்து பிரச்சினையை பெரிதுபடுத்தினால், அது எமக்கான அழிவு பாதையாகவே அமையும்.” – என்றார்.
” அமரர். ஆறுமுகன் தொண்டமான் தான் மலையக மக்களின் பாதுகாப்பு அரண். அவர்போன்ற ஒரு தலைவர் மறுபடியும் உருவாகப்போவதில்லை. எனவே, நாம் அவர் காட்டிய வழியில் பயணிப்போம்.” இவ்வாறு இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய செந்தில் தொண்டமான்,
” எமது மறைந்த தலைவரின் ஜனன தினம் இன்றாகும். அவர் வாழும்போது, பிறந்தநாளை கொண்டாட வலியுறுத்துவோம். அவர் உடன்படமாட்டார். அடுத்த வருடம் பார்ப்போம் எனக்கூறி சமாளிப்பார். அன்றைய நாளில்கூட மக்களுக்கே சேவை செய்வார்.
அப்படிபட்ட ஒரு தலைவர் இனி வரப்போவதில்லை. துணிவு, தூரநோக்கு சிந்தனை என கொள்கை அடிப்படையில் எம்மை அவர் வழிநடத்தியுள்ளார். மக்களின் பாதுகாப்பு அரணாக இருந்தார். அவர் இருக்கும்போது நாம் ஒன்றாக அவர் காட்டும் வழியில் பயணித்தோம். தற்போதும் அதே வழியில் பயணிப்போம்.” – என்று குறிப்பிட்டார்.
” மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான், மக்களுக்காக கண்ட கனவுகளை நிச்சயம் நாம் நிறைவேற்றுவோம்.” – என்று இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ரமேஷ்வரன்,
” தலைவரின் பிறந்தநாளன்று அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது வழமை. கல்விக்கு முன்னுரிமை வழங்குமாறு வலியுறுத்துவார். அந்தவகையில் அவர் காட்டிய வழியில் இம்முறையும் பாடசாலைகளுக்கு உதவிகளை வழங்குகின்றோம்.
எமது சமூகம் கல்வியால் உயர வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டிருந்தார். எமது தலைவரின் கனவுகளை நிச்சயம் நாம் நிறைவேற்றுவோம்.” – என்றார்.