எமக்கு வழிகாட்டியாக திகழ்ந்த அன்னாரின் இழப்பு இ.தொ.காவிற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

0
31

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 83 வருட அரசியல் வளர்ச்சிக்கு அடித்தளமாக செயற்பட்ட முன்னாள் தலைவர் முத்துசிவலிங்கத்தின் இழப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு பாரிய ஒரு இழப்பாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நிதி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இரங்கல் செய்தியில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

மலையக மக்களின் உரிமைக்குரலாக ஒலித்த பெருந்தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பிறகு முத்துசிவலிங்கத்தின் திடீர் மறைவு இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு வேதனையளிக்கின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் அரசியல் செயற்பாடுகளில் இருந்த காலத்தில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு, கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை மற்றும் மலையக மக்களுக்கு தேவையானவற்றை அறிந்து மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானுடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளையும் மிக துல்லியமாக முன்னெடுத்து வந்தார்.

அதுமட்டுமில்லாமல் மலையகத்தில் பல தோட்டங்களுக்கு மின்சாரத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

எமது ஸ்தாபனத்தின் மூத்த தலைவர் என்ற ரீதியில் எமக்கு வழிகாட்டியாக திகழ்ந்த அன்னாரின் இழப்பு எமக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் காலம் முதல் அமரர் முத்து சிவலிங்கம் பெருந்தோட்டத்துறைக்கு பல்வேறு முன்மாதிரியான சேவையாற்றியதோடு, பாராளுமன்றத்திலும் மலையக மக்களுக்காக குரல் எழுப்பியுள்ளதோடு, அமைச்சராகவும், பிரதியமைச்சராகவும் மக்களுக்கு சேவையாற்றியுள்ளார்.

அன்னாரின் பிரிவால் துயர்கொண்டுள்ள குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

க.கிஷாந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here