தமிழ் முற்போக்கு கூட்டணியின் கட்சிகள் ஒன்றுடன் ஒன்று கலந்து, கூட்டணி என்பது தனி ஒரு கட்சியாக செயற்பட வேண்டிய அடுத்த கட்டம் உதயமாகி விட்டது என எண்ணுகிறேன். அதேபோல், எமது கூட்டணியின் தொழிற்சங்கங்களான தொழிலாளர் தேசிய சங்கம், மலையக தொழிலாளர் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவையும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு ஒரே தொழிற்சங்கமாக புதிய பொது பெயரில், தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அரசியல் கட்சியின் தொழிற்சங்கமாக செயற்பட்ட வேண்டிய காலமும் உதயமாகி விட்டது என எண்ணுகிறேன்.
இதுபற்றி கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் மற்றும் பிரதி தலைவர் அமைச்சர் இராதாகிருஸ்ணன் ஆகியோரிடம் நான் கலந்து பேசியுள்ளேன். இது விடயமாக எம் மத்தியில் புரிந்துணர்வும், கொள்கைரீதியான பொது உடன்பாடும் ஏற்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.
இது தொடர்பில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் மேலும் கூறியுள்ளதாவது,
எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளை இணைத்துக்கொண்டு நாம் இன்று கூட்டணியாக இரண்டு வருடங்களை கடந்து விட்டோம். இந்த கூட்டணி நடக்காது, நிலைக்காது, போகாது, பேசாது, செல்லாது என்று அநேக ஆரூடங்கள் கூறியவர்களை வாயடைக்க செய்துவிட்டு, நாம் எமது இனத்தின் நலன், எதிர்காலம் ஆகியவற்றை மாத்திரம் கருத்தில் கொண்டு ஐக்கியத்தை தொடர்ந்து நிலைநாட்டி வந்துள்ளோம். இது ஒரு சாதனை என்பதை வரலாறு பதிவு செய்யும் என நான் நம்புகிறேன்.
மலையகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டிய கடமையை எங்களிடம் இன்று வரலாறு ஒப்படைத்துள்ளதாக கருதுகிறேன். கடந்த காலங்களில் நமது முன்னோர் விட தவறுகளை நாம் விட முடியாது. தனிநபர், தனிக்கட்சி நலன்களை விட சமூக நலனே பெரிது என்பது வரலாறு எங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ள பாடமாகும். எனவே அடுத்த உறுதியான முற்போக்கு முடிவுகளை எடுத்து அடுத்த கட்டத்துக்குள் அடி எடுத்து வைக்க நாம் முடிவு செய்துள்ளோம். இந்த நாட்டில் செயற்படும் ஏனைய பல அரசியல் கட்சிகளுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்கனவே பல முன்னுதாரணங்களை காட்டியுள்ளது. இது அதில் இன்னுமொரு மைல் கல்லாக அமையும் என நான் நினைக்கிறேன்.
எமது இந்த முற்போக்கு நிலைப்பாடுகளை எமது இன, சமூக நலனை நாடும் அனைவரும் வரவேற்பார்கள் என நான் திடமாக நம்புகிறேன். மக்கள் நலன்களை விட சொந்த நலன்களையே முன்னிலைப்படுத்தும் பிற்போக்காளர்கள் மட்டுமே, தம் இருப்புக்கு ஒட்டுமொத்தமாக ஆபத்து என்று எதிர்ப்பார்கள். இந்த எதிர்ப்புகள் எம்மை எதுவும் செய்து விடாது. எம்மை நம்பும் இலட்சக்கணக்கான நல்ல உள்ளங்களின் ஆதரவுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்காலத்திற்குள் வீறுநடை போடும்.
நோர்ட்டன்பிரிட்ஜ் மு. இராமச்சந்திரன்