“மலையகப் பெருந் தலைவர்களான செளமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் உன்னத வழிகாட்டலில் உருப்பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மகிமை கெடாமல், மலையக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற, அர்ப்பணிப்புடன் தொண்டாற்றுவேன்” என, இ.தொ.காவின் புதிய தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் இந்திய வம்சாவளித் தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தி, அவர்களின் அரசியல், பொருளாதார, தொழிற்சங்க உரிமைகள் மற்றும் ஏனைய நலன்புரி விடயங்களைக் காப்பதற்கான மாபெரும் ஸ்தாபனமாக உருவாக்கப்பட்ட, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுடனும் ஒன்றிணைந்து, எங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
83 வருட வரலாற்றைக் கொண்ட “இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்”, 1939 ஜூலை 25ம் திகதி”இலங்கை இந்திய காங்கிரஸ்” என ஸ்தாபிக்கப்பட்டு,1950 ஆம் ஆண்டு “இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்”எனும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இலங்கை அரசியலில் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் அவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்து, பல சாதனைகளை படைத்து, உலகிலே அதிக சாதனைகளை படைத்த தொழிற்சங்கமாக இன்று வரை திகழ்கின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் உறுப்பினராக இருப்பதென்பதே பெருமைக்குரிய விடயமாக இருக்கும் நிலையில், அதன் தலைவராகச் செயற்படுவதென்பது ஒரு பாரிய பொறுப்பாகும். என்னை தலைவராக தேர்ந்தெடுத்த தேசிய சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என, இ.தொ.காவின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“இன்று நாடு இருக்கும் இக்கட்டான சூழ்நிலை மற்றும் மக்களின் பாரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பை பொறுப்புடனும் அர்ப்பணிப்புடன் ஏற்று, உரிய கடமைகளை திறம்பட நிறைவேற்றுவேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மலையக மக்களின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மற்றும் பாதுகாப்பு என்ற அனைத்து உரிமைசார் விடயங்களிலும் இ.தொ.கா முன்னின்று செயற்படும். எம்மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்கும் எந்தவோர் உடன்பாட்டுக்கும் இ.தொ.கா வளைந்து கொடுக்காது, மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் காட்டிய வழியில் தடம் மாறாது தொடர்ந்து இ.தொ.கா பயணிக்கும் என்றும், அதன் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.