எயார்பெர்க் தோட்ட மக்களின் போராட்டமும்; கண்டு கொள்ளாத அரசும்!

0
145

தற்போது இலங்கை, கண்டி மாவட்டத்திலுள்ள ஹுன்னஸ்கிரிய எயாபார்க் தோட்ட மக்கள் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

தமது வாழ்வின் ஆதாரமாக இருக்கும் தோட்டத்தை தனியாருக்கு விற்பனை செய்யவேண்டாம், அடிப்படை வசதிகளை செய்து தாருங்கள் என்று கோரி கடந்த பெப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை போராட்டம் நடத்தியிருந்தனர். இலங்கை செங்கொடி சங்கத்தின் ஒருங்கிணைப்பில் இந்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.

போராட்டம் உக்கிரமானதையடுத்து இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவாத்தையில் ஈடுபட்டு தீர்வுகளை வழங்குவதாக தோட்ட மக்களுக்கு எழுத்து மூலம் வாக்குறுதியை வழங்கியது. இதனையடுத்து மார்ச் 3ம் திகதி எயாபார்க் தோட்ட மக்கள் தமது போராட்டத்தினை கைவிட்டனர்.

ஆனால் மார்ச் 24ம் திகதி இடம்பெறுவதாகக் இருந்த பேச்சுவார்த்தை நடைபெறாததால் தாம் ஏமாற்றப்பட்டதாக கருதி தோட்ட மக்கள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று மூன்றாவது நாளாக போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்த மக்கள் கடந்த 10 வருடங்களாக தமது உரிமையை கேட்டு அடிக்கடி போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறார்கள்.
போராட்டம் நடக்கும் போது அதிகாரிகளும் அமைச்சர்களும் பேச்சு நடத்தி, தீர்வு தருவதாக வாக்குறுதி கொடுத்து போராட்டத்தை நிறுத்தி விட்டு பின்னர் காணாமல் போய்விடுகின்றனர். இதற்கு இந்த மக்களை சார்ந்துள்ள சில தொழில் சங்கங்களும் துணை போயுள்ளன.

மலையக தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடும் போது, தொழில் சங்கங்களும் இணைந்து போராடுகின்றன. போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து மக்களோடு மக்களாக நிற்கிறார்கள். பின்னர் அரசாங்கமோ சம்பந்தப்பட்ட கம்பெனிகளோ பேச்சு நடத்த வரும் போது போராடும் மக்களின் பிரதிநிதிகளாக தொழில் சங்கங்கள் பங்கெடுக்கின்றன. பின்னர் இந்த தொழில் சங்கங்கள் மக்களை ஏமாற்றி விட்டு தமக்கான ‘டீலை’ பேசி முடித்து கொள்கிறார்கள். ஏமாற்றப்பட்டதை உணரும் மக்கள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கிறார்கள்.
இதுவே மலையக தமிழ் தோட்ட தொழிலாளர்களின் நிலையாக தொடர்கிறது. போராடுவதால் ஏற்படும் பொருளாதார மற்றும் ஏனைய பாதிப்புகளை தொழிலாளர்களே ஏற்க வேண்டியுள்ளது. ஆனால் போராட்டத்தின் பலனை தொழில் சங்கங்கள் அனுபவிக்கின்றன.

இதனை நன்கு புரிந்து வைத்திருக்கும் அரசியல்வாதிகளும், கம்பெனிகளும் தொழில் சங்க தலைவர்களை திருப்தி படுத்திவிட்டு தமது கொள்ளையை தொடர்கிறார்கள். இலங்கையில் 50 வருடங்களுக்கு மேலாக இந்த நிலையே தொடர்கிறது.

கண்டி மாவட்டத்திலுள்ள எயாபார்க் தோட்ட மக்கள் கடந்த 10 வருடங்களாக போதிய வேலை நாட்களும் சம்பளமும் இல்லாமல் துன்பப்பட்டு வருகிறார்கள். வேலை செய்யும் நாட்களுக்கான சம்பளமே வழங்கப்படுவதால் குறைந்தது 25 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும். ஆனால் மலையகத்திலுள்ள பெரும்பாலான தோட்டங்களில் அவ்வாறு வழங்கப்படுவதில்லை. எனவே தொழிலாளர்கள் எப்போதும் வறுமையில் உழல வேண்டியுள்ளது.

மேலும் தோட்டங்கள் தனியாருக்கு பிரித்து விற்கப்படுகின்றன. இதனால் தோட்ட வேலையை நம்பியிருக்கும் மக்கள் நடுத்தெருவில் விடப்படுகிறார்கள். நூற்றாண்டுகளாக தோட்டத்தில் உழைத்து அரசாங்கத்தையும், கம்பனிகளையும் வாழ வைத்த தொழிலாளர் பரம்பரைக்கு லாபத்தில் பங்கோ அல்லது தோட்ட நிலங்களோ கொடுக்கப்படுவதில்லை.

தோட்டங்களை தனியாருக்கு கொடுப்பதாயின் ஆண்டாண்டு காலமாக அந்த தோட்டத்தில் வேலை செய்த எமக்கு முன்னுரிமை கொடுங்கள், தோட்ட நிலங்களை எமக்கு குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் என்ற அடிப்படையில் குத்தகைக்கு தாருங்கள் என்று தொழிலாளர்கள் நீண்ட காலமாக கேட்டு வருகிறார்கள். ஆனால் கொள்ளை லாபத்தை மட்டுமே எதிர்பார்க்கும் கம்பெனிகளும், ஊழல் அரசியல்வாதிகளும், ஏமாற்றும் ஊழல் தொழில் சங்கங்களும் இதனை கண்டு கொள்வதில்லை.

இந்த நிலையில்தான் எயாபார்க் தோட்ட மக்கள் 25 நாட்கள் வேலை, குத்தகைக்கு 2 ஏக்கர் தேயிலை காணி, அடிப்படை வசதிகள் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே மீண்டும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here