எரிபொருள் தட்டுப்பாட்டால் மலையக எண்ணை நிரப்பு நிலையங்களில் அதிகாலை நீண்ட வரிசை,மக்கள் பெரும் அவதி.

0
102

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினையடுத்து மலையகத்திலும் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றன இதனால் மலையகத்திலுள்ள சில எண்ணை நிரப்பு நிலையங்களில் இன்று (17) அதிகாலை மூன்று மணி முதல் எரிபொருள்களை பெற்றுக்கொள்வதற்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர் குறித்த தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும் அவதியுற்று வருவதாகவும் பொது மக்கள் முனுமுனுக்கின்றனர்.
டீசல் தட்டுப்பாடு காரணமாகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் டீசல் பெற்றுக்கொடுப்பதன் காரணமாக மலையகத்தில் உள்ள ஹட்டன் கொட்டகலை தலவாக்கலைக உள்ளிட்ட எண்ணை நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

இதனால் கூலி வாகன சாரதிகள் உட்பட பொது போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் சாரதிகள் நடத்துனர்கள் பொது மக்கள் என பலரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
எனினும் இன்றைய தினம் பல எண்ணை நிரப்பு நிலையங்களுக்கு டீசல் உட்பட எரிபொருட்கள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஹட்டன் கொட்டகலை, டிக்கோயா, தலவாக்கலை உள்ளிட்ட பிரதான நகரங்களில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதனால் பல எரிவாயு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள்,மற்றும் உணவகங்கள்,குடும்ப தலைவிகள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.கடந்த காலங்களில் ஏற்பட்ட எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பலர் மண்ணெண்ணை அடுப்புக்கு மாறியிருந்தனர் எனினும் கடந்த ஐந்து நாட்களாக மண்ணெண்ணை தட்டுப்பாடு காணப்படுவதனால் சமையலில் செய்வதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இதே வேளை பொருட்களின் விலையேற்றம் காரணமாக இன்று பல்வேறு தொழிலில் ஈடுபடுபவர்கள் அதனை செய்ய முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அத்தியவசிய பொருட்களின் விலை மற்றும் தட்டுப்பாடு காரணமாக சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாகவும் விலையுயர்வு காரணமாக புடைவை வர்த்தகம் மற்றும் தையல் தொழில்கள் ஆகியன போதியளவு வருமானம் இல்லாததன் காரணமாக பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.

அதிகமாக வர்த்தக நிலையங்களில் தொழில் செய்பவர்கள் சம்பளம் பெற்றுக்கொடுக்க முடியாமை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளனர்.இதனால் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதே வேலை சீமந்து விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்கள் கருத்து தெரிவிக்கையில் அரசாங்கம் இன்று 1850 ரூபாவுக்கு சீமந்தினை விற்பனை செய்ய சொல்வதாகவும் ஆனால் சீமந்து விநியோகம் செய்பவர்கள் தங்களுக்கு போக்குவரத்து உள்ளிட்ட கட்டணங்களை சேர்த்து 2000 ரூபாவுக்கு விற்பனை செய்வதாகவும் இதனால் சீமந்து விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே உரிய விலைக்கு போதுமான அளவு சீமந்தினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சீமந்து விற்பனையில் ஈடுபடுபவர்கள் தெரிவித்தனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here